மேற்கு வங்கத்தில் ஆளுநர் சி.ஆர். ஆனந்த் போஸுக்கும், முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் மோதல் நிலவி வந்த நிலையில் அந்த மாநில ஆளுநர் ராஜினாமா அறிவிப்பு வெளியாகியுள்ளது. தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அவர் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, ஆளுநர் சி.ஆர். ஆனந்த் போஸ் ராஜினாமா தொடர்பாக முதல்வர் மம்தா பானர்ஜி பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸின் திடீர் ராஜினாமா செய்தியால் நான் அதிர்ச்சியும், ஆழ்ந்த கவலையும் அடைந்துள்ளேன். அவரது ராஜினாமாவுக்கான காரணங்கள் தற்போது வரை எனக்கு தெரியவில்லை. வரவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் அழுத்தங்களுக்கு ஆளுநர் ஆளாகியிருந்தால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். மேலும், மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் எனக்கு தெரிவித்தார். இது தொடர்பாக மாநில முதல்வர் என்ற அடிப்படையில் என்னிடம் கலந்தாலோசிக்கவில்லை. இத்தகைய நடவடிக்கைகள் இந்திய கூட்டாட்சி அமைப்பின் அடித்தளத்தை குலைக்கிறது. கூட்டாட்சி கொள்கைகளை மத்திய அரசு மதிக்க வேண்டும். ஜனநாயக மரபுகளையும், மாநிலங்களின் கண்ணியத்தையும் சிதைக்கும் ஒருதலைப்பட்ச முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்” என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.