Rock Fort Times
Online News

தீரர் கோட்டமாம் திருச்சியில் திரள்வோம்; திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம் வாரீர்…! * தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு…!

தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கட்சித் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், திருச்சி, சிறுகனூரில் மார்ச் 9-ம் தேதி நடைபெறும் “ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்” என்ற தேர்தல் சிறப்பு மாபெரும் நிர்வாகிகள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கிறேன். தலைமைக் கழகம் முதல் கிளைக்கழகங்கள் வரை அனைத்து அணிகளையும் சேர்ந்த ஏறத்தாழ பத்து லட்சம் நிர்வாகிகள் கலந்துகொள்ளும் பெருவிழாவாக இந்த மாநாடு நடைபெற உள்ளது. தி.மு.க. என்பது ஒரு அரசியல் கட்சி மட்டுமல்ல, குடும்ப பாசத்துடன் இணைந்த பெரிய குடும்பம். இந்த குடும்ப உணர்வை உருவாக்கியவர்கள் பேரறிஞர் அண்ணாதுரை மற்றும் முத்தமிழறிஞர் மு.கருணாநிதி ஆகியோர் ஆவர். 75 ஆண்டுகளாக வளர்ந்து வரும் இந்த இயக்கத்தின் நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து “திராவிட மாடல் 2.0” ஆட்சியை உருவாக்க வேண்டும் என்ற உறுதியுடன் இந்த மாநாட்டில் கூட வேண்டும் என்று அன்போடு அழைக்கின்றேன். எதிரிகளின் செயல்பாடுகள் குறித்து கவலைப்படாமல், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழர் உயர்வுக்கும் தொடர்ந்து உழைப்பதே தமது குறிக்கோள். திருச்சியில் நடைபெறும் மாநாடுகள் தி.மு.க. வரலாற்றில் எப்போதும் முக்கியமான திருப்புமுனையாக இருந்து வந்துள்ளன. அத்தகைய மாநாடுகளை சிறப்பாக நடத்துவதில் முக்கிய பங்கு வகிப்பவர் முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு. “நேரு என்றால் மாநாடு; மாநாடு என்றால் நேரு” என்று தாம் அடிக்கடி கூறுவதுண்டு. இம்மாநாட்டிற்கான பணிகளையும் அவர் மிகச் சிறப்பாக மேற்கொண்டு வருகிறார் என்பதை நான் நன்கறிவேன். தமிழ்நாட்டில் மதவெறி அரசியலுக்கு இடமில்லை என்றும் மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்பதே தங்களின் நிலைப்பாடு. 2021ம் ஆண்டு மக்களின் ஆதரவால் அமைந்த தி.மு.க. அரசின் திராவிட மாடல் ஆட்சி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றுள்ளது. பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் பலனளிக்கும் திட்டங்கள் மூலம் தமிழ்நாடு முன்னுதாரண மாநிலமாக உருவாகி வருகிறது. இந்த சாதனைகளை அடிப்படையாக கொண்டு 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று “திராவிட மாடல் 2.0” ஆட்சியை அமைப்போம் என்ற உறுதியுடன் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். “திருச்சிக்குத் திரண்டு வா உடன்பிறப்பே, உன் திருமுகம் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” என அக்கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்