தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதில், திமுக சார்பில் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி சோமு, அதிமுகவின் தம்பிதுரை மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு உட்பட நாட்டில் 10 மாநிலங்களில் காலியாக உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடையவுள்ளது. தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 6 இடங்களில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் 4 இடங்கள் திமுகவுக்கும், 2 இடங்கள் அதிமுகவுக்கும் கிடைக்கும். திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை இடமும், காங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக்கை கட்சியில் மேலிடம் அறிவித்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் திலக், மணிப்பூர், நாகலாந்து மாநிலங்களுக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.