வார்டுகளில் எந்தப் பணியும் நடக்கவில்லை: திருச்சி மாநகராட்சி கூட்டத்திலிருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு…!
திருச்சி மாநகராட்சி சாதாரணக்கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி, ஆணையர் மதுபாலன் ஆகியோர் முன்னிலையில் இன்று( மார்ச் 3) நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை ஆணையர் பாலு, நகரப் பொறியாளர் பி.சிவபாதம் , மண்டலக்குழுத் தலைவர்கள் மதிவாணன், துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், ஜெய நிர்மலா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
எல்.ரெக்ஸ் (காங்கிரஸ்): இன்னும் ஒரு வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. 65 வார்டுகளிலும் சாலைகளில் உள்ள பள்ளங்கள் மற்றும் போர்வெல்களை சரி செய்ய சிறப்பு நிதியாக வார்டு ஒன்றுக்கு ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
ந.பிரபாகரன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி): வாய்க்கால் பராமரிப்புக்கு ரூ.100 கோடி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அது எந்தெந்த நீர் நிலைகளில் எவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளது?
மேயர் அன்பழகன்:
இதன் முக்கிய நோக்கம் கழிவுகள் நீர்நிலைகளில் கலப்பதை தடுப்பதுதான். குடியிருப்புகள் மற்றும் வர்த்தக மையங்கள் நிறைந்துள்ள பகுதிகளில் குப்பைகளை கொட்டாத வண்ணம் கம்பி வேலி உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் உய்யக்கொண்டான், இரட்டை வாய்க்கால் உள்ளிட்ட மாநகருக்குள் செல்லும் நீர்நிலைகளில் மேற்கொள்ள கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
எல்ஐசி சங்கர்: (திமுக) திருச்சி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பல கட்டிடங்கள் வருவாய் இல்லாமல் கிடக்கிறது. பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் முனையம் மூலமாகவும் மாநகராட்சிக்கு எதிர் பார்த்த வருவாய் கிடைக்கவில்லை. கடந்த இரண்டு மாதமாக அங்கு ஏசி வேலை செய்யவில்லை.
பைஸ் அகமது (மனிதநேய மக்கள் கட்சி): எனது வார்டுக்கு உட்பட்ட சத்யா நகர் மற்றும் புது மாரியம்மன் கோவில் தெரு பகுதிகளில் உள்ள பொதுக் கழிப்பிடங்கள் பராமரிக்கப்படாமல் உள்ளது.
அதனை சரி செய்து தர வேண்டும் .
வழக்கறிஞர் செந்தில் (திமுக): 2023-ல் கோட்ட வாரியாக சமுதாயக் கூடங்கள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது ஆனால் எனது வார்டில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டும் சமுதாயக்கூடம் அமைக்க இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
கோ.கு. அம்பிகாபதி ( மாநகராட்சி அதிமுக தலைவர்): திருச்சி, பஞ்சப்பூர் பஸ் நிலைய பணிகளுக்கு மாநகராட்சி பொது நிதி முழுவதையும் செலவழித்து விட்டனர்.இதனால் வார்டுகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வளர்ச்சி திட்ட பணிகள் எதுவும் நடைபெறவில்லை.கேட்டால் அதை செய்துள்ளோம், இதை செய்துள்ளோம் என்று கூறுகிறார்கள். பஞ்சப்பூர் பஸ் நிலையத்தில் இதுவரை நடந்த பணிகள் குறித்து முழு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
வெளிநடப்பு:
முத்துச்செல்வம் (நிதிக்குழு தலைவர்): மாநகராட்சியில் எண்ணற்ற வளர்ச்சி திட்ட பணிகள் நடந்துள்ளன. திருவெறும்பூர் பஸ் நிலையம், ஸ்ரீரங்கம் பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. என்றார். அப்போது அதிமுக கவுன்சிலர்களுக்கும்,திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை அடுத்து, அதிமுக கவுன்சிலர்கள் கோ.கு. அம்பிகாபதி, அரவிந்தன், அனுசியா ரவிசங்கர் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். அவர்கள் வெளியேறினாலும் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. கூட்டத்தில் மொத்தம் 133 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Comments are closed.