முதல்வர் மு.க.ஸ்டாலின்-ப.சிதம்பரம் பேச்சில் உடன்பாடு இல்லை: திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி?
கடந்த சட்டமன்றத் தேர்தலை போலவே இந்த சட்டமன்றத் தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் போட்டியிடுகிறது. ஆனால், இந்த முறை ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், ஆட்சியில் பங்கு தர இயலாது என திமுக திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில் இன்று(மார்ச் 3) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் மூத்த நிர்வாகி ப. சிதம்பரம் ஆகியோர் சந்தித்து பேசினர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசியும் தொகுதி பங்கீடு எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், இன்று, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் மற்றும் நான் ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசினோம். இந்த சந்திப்பின்போது தி.மு.க. எம்.பி.க்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு ஆகியோர் உடனிருந்தனர். தற்போது “தகவல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை; பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தி.மு.க.விடமிருந்து எந்த கெடுவும் விதிக்கப்படவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்- ப.சிதம்பரம் இடையேயான சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே. பேச்சுவார்த்தை நிறைவடைந்த பின்பு தகவல் சொல்கிறோம்” என்றார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் வழங்க தி.மு.க. தலைமை முன் வந்துள்ளதாகவும், ஆனால் காங்கிரஸ் தரப்பில் 36 தொகுதிகளைக் கேட்பதால் இழுபறி நீடிக்கிறது. கடந்த தேர்தல்களை காட்டிலும் இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க., மக்கள் நீதி மையம் உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்துள்ள நிலையில் அவர்களுக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டியிருப்பதால் காங்கிரஸ் தங்களின் நிலையை புரிந்துக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸுடம் திமுக கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாளுடன் நிறைவு பெறவுள்ள நிலையில், அதற்குள் காங்கிரஸ் தனது நிலைபாட்டை தெரிவிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால், இன்று இரவுக்குள் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் அடுத்தகட்ட நகர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.