தமிழக முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த முக்கிய நாளில், பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல்நலத்துடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இருவருக்கும் இடையே அரசியல் மற்றும் கொள்கை ரீதியாக பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பதவியின் மரியாதையை காக்கும் வகையில் பிரதமர் வாழ்த்து தெரிவித்திருப்பது அரசியல் முதிர்ச்சியின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களுக்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, பெரியார் திடலிலும் தந்தை பெரியாரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இன்று காலை அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “எனது வாழ்வின் குறிக்கோள் தமிழ் மொழியையும், தமிழகத்தின் உரிமைகளையும் பாதுகாப்பதே எந்த சூழலிலும் யாருக்கும் தலைவணங்காமல், தமிழக முன்னேற்றத்திற்காக என்னை தொடர்ந்து அர்ப்பணிப்பேன்” என தனது பிறந்தநாள் உறுதிமொழியை பதிவு செய்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை முதலே திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் பெருமளவில் திரண்டு வந்து தங்களது தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Comments are closed.