Rock Fort Times
Online News

அதிமுகவில் உள்ள அனைவரையும் வெளியேற்றிவிட்டு என்ன செய்யப் போகிறாராம் அவர்… சசிகலா கேள்வி!

மூன்று முறை தமிழக முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று( பிப்.27) முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். இதுகுறித்து புதிதாக கட்சி தொடங்கி இருக்கிற சசிகலா , தனது எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டு உள்ளார். அதில், தமிழக முன்னாள் முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடியும், சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர் செல்வத்தின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது. தமிழகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டிய ஒரு தீய சக்தியாக திமுக விளங்கும் நிலையில் தாய் கழகம் என்று நினைத்து கொண்டு திமுகவில் தங்களை இணைத்துக் கொள்வது ஒரு தவறான முடிவாகத் தான் அமைந்து உள்ளது. ஆனால் இந்த நிலைமைகளுக்கு எல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான். அவர் வேறு யாருமில்லை. தான் மட்டும்தான் அதிமுக என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு தனக்கு தானே தலைவராக அறிவித்துக் கொண்டவர்கள், தன்னை சுற்றி உள்ளவர்களை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள், திமுகவினரின் முழு கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள அனைவரையும் வெளியேற்றி விட்டு புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா கொள்கைகளுக்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டு வரும் துரோகிகளின் அழிவு காலம் நெருங்கி விட்டது. வருகிற சட்டமன்ற தேர்தலில் எனது தலைமையில் புரட்சித் தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், புரட்சித் தலைவி அம்மா வழி வந்த சிங்கங்களும் எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்துவது உறுதி என்று தெரிவித்து உள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவால் முதல்-அமைச்சர் பதவிக்கு அடையாளம் காட்டப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அந்த நன்றியை மறந்து விட்டு சசிகலாவை கடந்த 9 ஆண்டுகளாக இபிஎஸ் கண்டு கொள்ளவே இல்லை. இதனால் பொறுமை இழந்த சசிகலா, ஜெயலலிதா பிறந்த தினமான பிப்ரவரி 24ம் தேதி புதிய கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். ஆனால், அன்றைய தினம் கட்சியின் கொடியை மட்டுமே அறிமுகம் செய்தார். கட்சி பெயரை பின்னர் அறிவிப்பதாக தெரிவித்தார். அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளரை கடுமையாக விமர்சித்தார். ஆனால் ஒரு இடத்தில் கூட அவர் பெயரை உச்சரிக்கவில்லை, அவர் பெயரை சொல்லக்கூட நான் விரும்பவில்லை. அவர் யார் என்று உங்களுக்கே தெரியும் என்று கூறினார். தற்போதும் அவரது பெயரை குறிப்பிடாமல் அவரால்தான் அதிமுக அழிந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தான் இவ்வாறு குறிப்பிடுகிறார் என்பது ஊர்ஜித மாகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்