Rock Fort Times
Online News

அதிமுகவை அழிவுப்பாதைக்கு அழைத்து செல்கிறார் இபிஎஸ்…* திமுகவில் இணைந்த ஓபிஎஸ் கடும் தாக்கு…!

மூன்று முறை தமிழக முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று(பிப்.27) சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பேரறிஞர் அண்ணா ஆரம்பித்த தாய்க்கழகமான திமுகவில் மகிழ்ச்சியோடு இணைத்துக் கொண்டுள்ளேன். திமுகவில் தொண்டனாகத்தான் இன்று இணைந்திருக்கிறேன். பாசத்தோடு அரவணைத்த தளபதிக்கு நன்றி. அரசியலில் அனைத்து மக்களையும் அரவணைக்கும் அரசியல் பண்பாடு கொண்டவர் ஸ்டாலின். பெண்கள் சிரமமின்றி குடும்பத்தை வழிநடத்த அனைத்து உதவிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளிக்கிறார். திராவிட இயக்கத்தை, சித்தாந்தத்தை கட்டிக்காப்பதில் முன்னணித் தலைவராக ஸ்டாலின் திகழ்கிறார். அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளர் சர்வாதிகாரியாக நடந்துகொள்ளும் எடப்பாடி பழனிசாமி என்றும் வெல்ல முடியாத சூழலை உருவாக்கி உள்ளார். எடப்பாடி பழனிசாமி, பொதுச்செயலாளராக பதவி ஏற்றது முதல் தற்போது வரை அதிமுகவை அழிவுப்பாதைக்குத்தான் அழைத்து செல்கிறார். பழனிசாமிக்கு தலைமைப்பண்பு இல்லை. தென்மாவட்டத்திலிருந்து எந்த ஒரு தலைவரும் மேலே வரக்கூடாது என்பதில் கவனமாக உள்ளார். இவ்வாறு அவர் கூறினார். தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கட்சியில் 3 முறை முதலமைச்சராக பதவி வகித்தவர் வேறொரு கட்சியில் இணைந்தது இதுவே முதல்முறை. ஓபிஎஸ் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் ஏற்கனவே திமுகவில் இணைந்த நிலையில் தற்போது ஓபிஎஸ்-ம் திமுகவில் இணைந்தார். ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், எம்.எல்.ஏ. ஐயப்பன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களும் திமுகவில் இணைந்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்