Rock Fort Times
Online News

கரூரில் நாஞ்சில் சம்பத் பங்கேற்ற கூட்டத்தில் கொடிக் கம்பம் சாய்ந்ததில் நிர்வாகி காயம்…!

கரூர் 80 அடி சாலையில் தவெக கொள்கை விளக்க பொதுக் கூட்டம் நேற்று( பிப்.25) நடைபெற்றது. இதற்காக அப்பகுதியில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் திடீரென மழை பெய்தது. கட்சியின் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேசிக் கொண்டிருக்கும்போது மேடைக்கு அருகே நடப்பட்டிருந்த கொடிக்கம்பம் மின் வயரில் உரசியதில் கொடி தீப்பற்றியது. உடனே அங்கிருந்தவர்கள் கொடிக் கம்பத்தை அகற்ற முயற்சித்தபோது, கொடிக் கம்பம் அப்படியே மேடை மீது சாய்ந்தது. கட்சியின் பேச்சாளர் ஜெகதீசபாண்டியன் தலை மீது கம்பம் சாய்ந்த போது, அதனை அவர் கைகளால் தடுத்தாலும், அவரது தலையில் லேசான காயம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மனோஜ்குமார் என்பவர் அளித்த புகாரின்பேரில் தவெக கரூர் மேற்கு நகர செயலாளர் சரவணன் மீது, கரூர் மாநகராட்சியின் அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைத்தது, ஜெனரேட்டர் வைத்தது, கொடிக் கம்பம் விழுந்து காயம் ஏற்படுத்தியதால் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது, தீப்பற்றக் கூடிய பொருட்களை பயன்படுத்தி கவனக்குறைவாக செயல்பட்டது ஆகிய பிரிவுகளின் கீழ் கரூர் நகர போலீஸார் இன்று (பிப்.26) வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் பரப்புரையில் விஜய் பேசிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தது நினைவு கூறத்தக்கது. தற்போது அடுத்த சம்பவம் நடந்துள்ளது. ஆனால் இதில் லேசான காயத்துடன் நிர்வாகி உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்