தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவானது மாநிலம் முழுவதும் இன்று(24-02-2026) கொண்டாடப்பட்டு வருகின்றது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட பல்வேறு தலைவர்கள் ஜெயலலிதாவுக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்தநிலையில், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைதொடர்ந்து, முன்னாள் அமைச்சர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், கட்சி அலுவலகத்தில் அதிமுக கொடியை ஏற்றி வைத்து, ஜெயலலிதாவின் பிறந்தநாளை குறிக்கும் வகையில் 78 கிலோ கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது. தொடர்ந்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. பிறந்த நாள் விழாவில் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.

Comments are closed.