Rock Fort Times
Online News

‘ஆம்புலன்ஸ் விமானம்’ விழுந்து நொறுங்கியதில் 7 பேர் பலி: மோசமான வானிலை காரணமா? -அதிகாரிகள் விசாரணை…!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து டெல்லி நோக்கி சென்ற விமான ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 7 பேரும் உயிரிழந்தனர். ஜார்க்கண்ட் மாநிலம் லதேஹர் மாவட்டத்தில் உள்ள சந்த்வாவைச் சேர்ந்தவர் சஞ்சய் குமார் (41). கடந்த 16ம் தேதி அவர் தீ விபத்தில் சிக்கிய நிலையில், 65 சதவீத தீக்காயங்களுடன் ராஞ்சியில் உள்ள தேவ்கமல் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சேர்த்திருக்கின்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவருடைய குடும்பத்தினர் மேல்சிகிச்சைக்காக அவரை டெல்லிக்கு கொண்டுசெல்ல திட்டமிட்டனர். அதற்காக, தனியார் விமான சேவை நிறுவனமான ரெட்பேர்ட் ஏர்வேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளனர். அவர்கள், பீச்கிராஃப்ட் சி90 என்ற சிறிய ரக விமான ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்துள்ளனர். அதனையடுத்து, நேற்று (பிப்.23) மாலை சஞ்சய் குமாரை டெல்லிக்கு கொண்டுசெல்ல திட்டமிட்ட நிலையில், ராஞ்சி விமான நிலையத்திலிருந்து இரவு 7.11 மணிக்கு விமான ஆம்புலன்ஸ் புறப்பட்டுள்ளது. அதில், கேப்டன் விவேக் விகாஸ் பகத், கேப்டன் சவ்ராஜ்தீப் சிங், சஞ்சய் குமார், டாக்டர் விகாஸ் குமார் குப்தா, சச்சின் குமார் மிஸ்ரா, அர்ச்சனா தேவி மற்றும் துரு குமார் ஆகிய 7 பேர் பயணித்துள்ளனர். இந்நிலையில், புறப்பட்ட 20 நிமிடங்களிலேயே விமானம் காணாமல் போனது. பின்னர் நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையில், ஜார்க்கண்ட் மாநிலம் சிமாரியாவில் உள்ள பரியாட்டு பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் விமானம் கீழே விழுந்து நொறுங்கி கிடப்பது தெரியவந்தது. விமானத்தில் இருந்த சஞ்சய் குமார், 2 பணியாளர்கள் உட்பட 7 பேரும் விபத்தில் உயிரிழந்தனர். இந்த விபத்து மோசமான வானிலை காரணமாக நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்