தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் கூட்டணி, தொகுதி பங்கீடு, விருப்ப மனுக்கள் பரிசீலனை ஆகியவை விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. திமுகவை பொருத்தவரை அதே கூட்டணி நீடிக்கிறது. கூடுதலாக தேமுதிக இந்த முறை முதல் முறையாக இடம் பெற்றுள்ளது. ஆனால், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என முரண்டு பிடித்து வருகிறது. ஆனால், ஆட்சியில் பங்கு தர இயலாது என திமுக திட்டவட்டமாக அறிவித்து உள்ளது. இதனால், ஆட்சியில் பங்கு கொடுப்போம் என்று அறிவித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் காங்கிரஸ் கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியை திமுக கூட்டணியில் தக்க வைக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நேற்று( பிப்.22) இரவு சென்னை வந்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்து இன்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தி.மு.க. எம்.பி. கனிமொழியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மரியாதை நிமித்தமாக தி.மு.க. எம்.பி. கனிமொழியை சந்தித்தேன். தொகுதி பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி எத்தனை இடங்களை பெறப்போகிறது என்பது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. எங்களுக்கு எத்தனை தொகுதிகள் வேண்டும் என்பதை தி.மு.க.விடம் கூறியுள்ளோம். அதிகாரப் பகிர்வை விட தொகுதி பங்கீடு குறித்து முதலில் இறுதி செய்ய வேண்டும். எனவே அதுகுறித்து தற்போது பேசப்பட்டு வருகிறது. பேச்சுவார்த்தை நிறைவு பெற்றவுடன் அதுகுறித்து தகவல் தெரிவிப்போம்.” இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.