Rock Fort Times
Online News

திமுகவை போன்ற வலிமையான கட்சி இந்தியாவிலேயே இல்லை… முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்…!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடுகளும் நடந்து வருகின்றன. திமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு நடந்து வருகிறது. அந்தவகையில் மதுரை உத்தங்குடியில் தென்மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மாநாடு இன்று(21-02-2026) நடைபெற்றது. இம்மாநாட்டில் மதுரை, திண்டுக்கல், தேனி, நெல்லை, தூத்துக்குடி. கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சம் திமுக வாக்குசாவடி முகவர்கள் பங்கேற்றனர். இம்மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- சித்திரை திருவிழாவைபோல் இங்கு கூடியுள்ள திமுகவினரை பார்த்தால் உற்சாகம் பிறக்கிறது. பாசம் என்றாலும், கோவில் என்றாலும், சாப்பாடு என்றாலும், வீரம் என்றாலும் மதுரைதான். பூத் அளவில் திமுகவை போன்ற வலிமையான கட்சி இந்தியாவிலேயே யாரும் இல்லை. எந்த பக்கம் திரும்பினாலும் கருப்பு சிவப்புதான் தெரிகிறது. என்னுடைய நிகழ்ச்சிகள் ஒருபக்கம் என்றால் திமுகவினரின் நிகழ்ச்சிகள் ஒருபக்கம் நடைபெறுகிறது. திமுகவை தொட்டுப்பார்க்க நினைத்தால் தமிழ்நாட்டு மக்களே பதிலடி கொடுப்பார்கள் என எதிரிகள் அஞ்சுகின்றனர். அடுத்த 2 மாதங்கள் ஓய்வின்றி உழைக்க வேண்டும். சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவதுதான் நமது லட்சியம். சமூக ஊடகங்களை விட மக்களை நேரில் சந்திக்க வேண்டும். வாக்காளர்களை கனிவாக, நட்பாக, மரியாதையாக அணுக வேண்டும். மக்கள்தான் எஜமானர்கள். நாம் அவர்களின் சேவகர்கள். மக்களை சந்திப்பதைவிட வேறு எதுவும் ஈடாகாது. இவ்வாறு அவர் பேசினார் .

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்