திருச்சியில் 4-வது புத்தக திருவிழா…- அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தனர்!
திருச்சி மாவட்ட நிர்வாகம், பொது நுாலக இயக்ககம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில், 4வது ஆண்டு புத்தகத் திருவிழா திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் தொடங்கியது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டனர்.

பின்னர், கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து அமைச்சர் நேரு பேசுகையில்,‘‘மறைந்த முதல்வர் கருணாநிதி, ஆட்சிப்பொறுப்பில் இருந்த போது பதிப்பகத்தார்களின் வேண்டுகோளை ஏற்று புத்தகக் கண்காட்சியை சென்னையில் தொடங்கினார். இதன்மூலம் பதிப்பகங்கள் வளர்ச்சியடைந்தன. தனது சொந்தப்பணம் ரூ.ஒரு கோடியை டெபாசிட் செய்து ஆண்டுதோறும் சிறந்த நுாலாசிரியர்களுக்கு விருதுகள் வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தினார். அவருக்குப்பின் யாரும் இதனை செயல்படுத்தாத நிலையில், முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு மாவட்டம் தோறும் புத்தக கண்காட்சியை நடத்தி வருகிறார். மாணவர்கள் இந்த புத்தகக் கண்காட்சிக்கு வந்து நல்ல நுால்களை படிக்க வேண்டும்‘‘, என்றார். அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், ‘‘சென்னையில் மட்டுமே நடந்த புத்தகக் கண்காட்சியை, அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தியவர் முதல்வர் ஸ்டாலின். மாணவர்கள் செல்போன் பழக்கத்திற்கு அடிமையாகாமல், புத்தகங்களை வாசிக்க வேண்டும். புத்தகங்கள் வாங்கினால் ‘வாசிக்கலாம்’, செல்போன் பார்த்தால் அதன் தீமைகளில் ‘சிக்கலாம்’ என்பதை உணர வேண்டும் என்றார். விழாவில், மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், கமிஷனர் மதுபாலன், எம்எல்ஏக்கள் சவுந்தரபாண்டியன், தியாகராஜன், ஸ்டாலின்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த புத்தக திருவிழா வருகிற 22ம்தேதி வரை, தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. இப்புத்தகக் கண்காட்சியில், 140க்கும் மேற்பட்ட அரங்குகளில், 100க்கும் மேற்பட்ட பதிப்பகங்களின் பல்வேறு தலைப்புகளிலான லட்சக்ணக்கான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், அரசுத்துறை சாதனை விளக்க அரங்கு, அறிவியல் அரங்குகளும் இடம் பெற்றுள்ளன. நிகழ்ச்சியில், தினமும் மாலை உரையரங்கம், கலை நிகழ்ச்சிகளும், பாராட்டு நிகழ்வுகளும் நடைபெற உள்ளன.

Comments are closed.