தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. திமுக சார்பில் இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி மாநாடுகள், பொதுக் கூட்டங்கள், கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. பூத் கமிட்டி மாநாடுகளையும் நடத்தி வருகிறது. அந்தவகையில் இன்று(14-02-2026) திருப்பத்தூரில் திமுக வடக்கு மண்டல பூத் ஏஜென்ட் மாநாடு நடைபெறுகிறது. இதனால் ஜோலார்பேட்டை செல்வதற்கு இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை வழியனுப்பி வைக்க கட்சி நிர்வாகிகள் என பலரும் வந்தனர். அங்கிருந்த மக்கள் 5000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கியதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து ஜோலார்பேட்டை சென்ற முதல்வருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது பெண்கள் அவரை சூழ்ந்துகொண்டு 5000 உரிமைத் தொகை கொடுத்ததற்கு நன்றி தெரிவித்து இனிப்புகளை ஊட்டினர். இந்நிலையில் திடீரென ஒரு பயனாளியின் வீட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இதனை சற்றும் எதிர்பாராத அக்குடும்பத்தினர் முதல்வரை பார்த்ததும் திக்குமுக்காடி போயினர். அப்போது முதல்வர், தமிழக அரசின் ”திட்டங்கள் எல்லாம் வந்து சேருகிறதா?. மாதம் மாதம் மகளிர் உரிமைத் தொகை வருகிறதா?செல்போனில் மெசேஜ் வந்திருக்குமே? பிள்ளைங்க எந்த காலேஜில் படிக்கிறாங்க” என்று விசாரித்ததோடு ”நல்லா படிங்க” என்று வாழ்த்தி விட்டு விடை பெற்றார்.

Comments are closed.