Rock Fort Times
Online News

திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட குழந்தை சில மணி நேரங்களில் மீட்பு…!

திருச்சி மாவட்டம், துறையூரை சேர்ந்த விக்னேஷ் என்பவரது மனைவி சுகன்யா. இவர் கடந்த 11-ம் தேதி பிரசவத்திற்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினமே அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையில் சுகன்யாவுடன் அவரது உறவினர் பிரேமா இருந்துள்ளார். அதே பிரிவில், சிகிச்சைக்காக வந்த பெண் ஒருவர் தன் பெயர் மீனாட்சி என கூறி சுகன்யாவிடம் நட்பை ஏற்படுத்திக் கொண்டார். அவ்வப்போது சுகன்யாவிற்கு அந்த பெண் உதவியும் செய்துள்ளார். இந்நிலையில், இன்று(14-02-2026) காலை குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தி விட்டு வருகிறேன் என்று சுகன்யா அந்த பெண்ணிடம் கூறினார். அப்போது அந்த பெண் நான் சென்று தடுப்பூசி செலுத்தி விட்டு வருகிறேன் என குழந்தையை வாங்கிச் சென்றார். சுகன்யாவை கவனித்து வரும் உறவுக்கார பெண்ணும் காப்பி வாங்க கடைக்கு சென்று விட்டார். நீண்ட நேரமாகியும் அந்த பெண் திரும்பி வராததால் சந்தேகமடைந்த சுகன்யா மருத்துவமனையில் தேடினார். ஆனால், அந்த பெண்ணையும், குழந்தையும் காணவில்லை. சுகன்யாவின் உறவினர்களும் மருத்துவமனை முழுவதும் தேடிப் பார்த்தனர். எங்கு தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டு குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை வலை வீசி தேடினர். இந்நிலையில் சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் தனிப்படை போலீசார் குழந்தையை மீட்டுள்ளனர். கடத்தப்பட்ட குழந்தை சுமார் 6 மணி நேரத்தில் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. குழந்தையை கடத்திய மீனாட்சி என்பவரை போலீசார் கைது செய்தனர். அப்போது குழந்தை இல்லாத ஏக்கத்தில் எடுத்துச் சென்றதாக அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். மீட்கப்பட்ட குழந்தையை தாயிடம் ஒப்படைக்கும் பணிகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். குழந்தையை மீட்ட போலீசாரை போலீஸ் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்