Rock Fort Times
Online News

திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன ஆண் குழந்தை கடத்தல்…! (வீடியோ இணைப்பு)

திருச்சி மாவட்டம், துறையூரை சேர்ந்த விக்னேஷ் என்பவரது மனைவி சுகன்யா. நிறைமாத கர்ப்பிணியான சுகன்யா கடந்த 11-ம் தேதி பிரசவத்திற்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினமே அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு உறுதுணையாக அவரது உறவினர் பிரேமா இருந்துள்ளார். இந்தநிலையில் அதே பிரிவில், சிகிச்சைக்காக வந்த பெண் ஒருவர் சுகன்யாவிடம் அறிமுகமாகி உள்ளார். தன் பெயர் மீனாட்சி என கூறி சுகன்யாவிடம் நட்பை ஏற்படுத்திக் கொண்டார். அவ்வப்போது சுகன் யாவிற்கு அந்த பெண் உதவியும் செய்துள்ளார். இந்நிலையில் இன்று(14-02-2026) காலை குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தி விட்டு வருகிறேன் என்று சுகன்யா அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். அப்போது அந்த பெண் நான் சென்று தடுப்பூசி செலுத்தி விட்டு வருகிறேன்… நீ இங்கேயே இரு.. என குழந்தையை வாங்கிச் சென்றுள்ளார். சுகன்யாவை கவனித்து வரும் உறவுக்கார பெண்ணும் காப்பி வாங்க கடைக்கு சென்று விட்டார். நீண்ட நேரமாகியும் அந்த பெண் திரும்பி வராததால் சந்தேகமடைந்த சுகன்யா மருத்துவமனையில் தேடினார். ஆனால், அந்த பெண்ணையும், குழந்தையும் காணவில்லை. சுகன்யாவின் உறவினர்களும் மருத்துவமனை முழுவதும் தேடிப் பார்த்தனர்.

எங்கு தேடியும் கிடைக்காததால் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டு குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை வலை வீசி தேடி வருகின்றனர். திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்