200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும்: ஆட்சியில் பங்கு என்பது ஒத்து வராது…* முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம் !
சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெறும் தமிழ்நாடு ரவுண்ட் டேபிள் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- சட்டமன்ற தேர்தலில் 12 சதவீதம் வாக்கு வித்தியாசத்தில் திமுக வெல்லும் என கருத்துக்கணிப்பு வந்துள்ளது. கருத்துக்கணிப்பில் எங்களுக்கும், எதிர்க்கட்சிகளுக்குமான வாக்கு வித்தியாசம் 12 சதவீதம் தான். தமிழக மக்கள் மனதில் என்ன இருக்கிறது என்று எடுத்த கணக்கெடுப்பில் திமுக கூட்டணி வெல்லும் என தெரியவந்துள்ளது. திமுக அரசின் சாதனை திட்டங்களால் 65-க்கும் மேற்பட்ட விருதுகள் தமிழ்நாட்டை தேடி வந்துள்ளது. தமிழ்நாட்டிற்கும், திமுக அரசிற்கும் குடைச்சல் கொடுப்பதில் மத்திய பாஜக அரசு முனைப்பு காட்டி வருகிறது. திமுக வெல்லும் என கருத்துக்கணிப்பு வந்தாலும் நாங்கள் மெத்தனமாக இருக்க மாட்டோம். தொடர்ந்து உழைப்போம். இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை கூட திமுக ஆட்சியில் அடைந்தோம். தலைசிறந்த 100 கல்லாரிகளின் பட்டியலில் தமிழ்நாட்டின் 33 கல்லாரிகள் இருக்கின்றன. தமிழ்நாட்டின் வெற்றி பயணத்தை 2.0 ஆட்சியிலும் தொடர்வோம். தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு என்பது ஒத்துவராது. திமுக-காங்கிரஸ் இணைந்து தேர்தலில் போட்டியிடும். அரசியலையும் தாண்டி என்னுடைய சகோதரரைப் போன்றவர் ராகுல்காந்தி. சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்லும். இவ்வாறு அவர் கூறினார். ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பேசிவரும் நிலையில் அதற்கு முதல்வர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Comments are closed.