Rock Fort Times
Online News

திருச்சி அரசு பள்ளி மாணவர்களின் பெங்களூரு பயணம்..! வானில் நிஜமான கனவுகள்…

விமானத்தில் பறக்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருந்தாலும், நடுத்தர மக்கள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு இது இன்னும் கடினமாகவே உள்ளது. அதுபோல அரசுப் பள்ளி மாணவர்களின் கனவுகளும் சிதைந்து விடக்கூடாது என்பதற்காக, அவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தி, அதில் வெற்றி பெற்ற மாணவர்களை தங்களது சொந்த செலவில் விமானத்தில் அழைத்து சென்ற ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் இன்று(பிப். 07) நடைபெற்றுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா, சேதுராப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் பள்ளிக் குழந்தைகளின் கனவுகளை நினைவாக்கியுள்ளனர் பள்ளி தலைமை ஆசிரியர் முத்துக்கருப்பன் மற்றும் சக ஆசிரியர்கள். இதற்காக 3-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளிக் குழந்தைகளுக்கு சிறப்பு தேர்வு மற்றும் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு, ஒவ்வொரு வகுப்பிலும் வெற்றி பெற்ற தலா இருவர் என மொத்தம் 12 மாணவ, மாணவிகள் இன்று காலை ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் மூலம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு பெங்களூருவில் உள்ள பெங்களூர் சட்டமன்றம், விஸ்வேஸ்வரய்யா மியூசியம், திப்பு சுல்தான் அரண்மனை, லால் பாக் போன்ற இடங்களை சுற்றிப் பார்த்து அங்குள்ள மக்களிடம் உரையாடி மகிழ்ந்து பின்னர் தமிழகம் திரும்பவுள்ளனர். இந்த சுற்றுலா பயணம் மாணவ மாணவிகளின் கல்வியை மேம்படுத்தவும், மற்ற மாநில  மக்களின் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்ளவும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பாக கிடைத்துள்ளது. இது குறித்து தலைமை ஆசிரியர் முத்துக்கருப்பன், “தலைமை ஆசிரியரின் இந்த விமான பயணம் கனவும் நனவாகியது” என்றும், இதுபோல முகமறியா பலரும் முன்வந்தால், எத்தனையோ ஏழை மாணவர்களின் விமான பயணம் மட்டுமல்ல, அவர்களின் உயர்கல்வியும் வசமாகும் என்றும் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்