Rock Fort Times
Online News

தொகுதி பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுகிறேன்…- அண்ணாமலை..!

சிங்காநல்லூர், விருகம்பாக்கம் உள்ளிட்ட 6 தொகுதிகளின் தேர்தல் சுற்றுப் பயண பொறுப்பாளர் பணியிலிருந்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார். அவர், தந்தையின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை உடனிருந்து கவனிக்க வேண்டிய நிலையில் இருப்பதால் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்தார். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு சுற்றுப் பயண பொறுப்பாளர்களை நியமித்து அறிவித்த நிலையில், அண்ணாமலைக்கு கோவை சிங்காநல்லூர், மதுரை தெற்கு, சென்னை விருகம்பாக்கம், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், குமரி மாவட்டம் பத்மநாபபுரம் ஆகிய 6 தொகுதிகளுக்கு பொறுப்பாளர் பணி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கோவையில் இன்று (பிப்.3) காலை செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: “வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்பது தெரியவில்லை. அதற்கு காலம் தான் பதில் சொல்லும். கட்சி மேலிடம் முடிவு செய்யும். மேலும், எனது தந்தையின் உடல்நிலை சரியில்லாததால் இந்த 6 தொகுதிகளின் பணியில் இருந்து நான் விலகுகிறேன். இதை கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் தெரிவித்துள்ளேன்” என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, மத்திய பட்ஜெட் குறித்து அவர் “தாக்கலான பட்ஜெட்; குறுஞ்சிறு நடுத்தர நிறுவனங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் பெரிதாகிக் கொண்டே இருக்கிறது” என விமர்சித்தார். அண்ணாவின் குடும்பம் அரசியல் பக்கம் வருவதில்லை, திமுக ஆட்சி அண்ணா நினைவில் இருந்து விலகி விட்டது, திமுக-காங்கிரஸ் கூட்டணி உடைந்த கண்ணாடி போன்ற கருத்துக்களையும் அவர் முன்வைத்தார். மேலும், “விஜய் தனது பேச்சில் எந்த புதிய திட்டத்தையும் மக்கள் முன் போடவில்லை. அவர் கட்சிகள் செய்யாத திட்டங்களை குறித்து பேசவில்லை. அதனால் அவரது பேச்சைப் பற்றி கவலைப்படவில்லை. அவர் வெளியே வந்து வீதி வீதியாக பிரசாரம் செய்தால் மக்கள் ஏற்றுக்கொண்டால் பார்க்கலாம்” என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்