தனியார் பேருந்தில் ‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர்- நாதக வினர் செயலால் விழுந்து, விழுந்து சிரித்த போலீசார்…! (வீடியோ இணைப்பு)
தமிழ்நாட்டில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில், ‘அரசு போக்குவரத்து கழகம்’ என்று பெயர் எழுதப்பட்டுள்ளது. ஆனால் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பின்பற்றுவதை போல் மாநிலத்தின் பெயர் இடம்பெற வேண்டும் என்று சிலர் வலியுறுத்தி வருகின்றனர். அதாவது அரசுப் போக்குவரத்து கழகம் என்ற பெயருக்கு முன்பாக தமிழ்நாடு பெயர் இடம்பெற வேண்டும் என்று கூறி வருகின்றனர். நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் இதனை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களின் பேருந்து நிலையங்களில் ‘அரசு போக்குவரத்து கழகம்’ என்ற பெயருக்கு முன்பாக தமிழ்நாடு ஸ்டிக்கரை ஒட்டி வருகின்றனர். அந்தவகையில், கரூர் பேருந்து நிலையத்தில் நாதக சார்பாக மண்டலச் செயலாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் மருத்துவர் அணி செயலாளர் கருப்பையா தலைமையில் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசுப் பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ ஸ்டிக்கரை ஒட்ட முயன்றனர். அதனை போலீசார் தடுத்து அவர்களை கைது செய்து தனியார் பேருந்தில் அழைத்து சென்றனர். அப்போது தனியார் பேருந்தில் ஏற்றப்பட்ட நாதக நிர்வாகி திடீரென அந்த பேருந்திலும் தமிழ்நாடு ஸ்டிக்கரை ஒட்ட முயன்றார். அதனை பார்த்த போலீசார், “தம்பி… இது பிரைவேட் பஸ்ப்பா” என்று கூறி விழுந்து விழுந்து சிரித்தனர். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

Comments are closed.