தமிழக சட்டமன்றத் தேர்தல்: அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் டிச.15 முதல் விருப்ப மனு அளிக்கலாம்- இ.பி.எஸ்….!
2026ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் டிசம்பர் 15 முதல் 23 வரை விருப்ப மனு அளிக்கலாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கு வாக்காளர் பட்டியல் அடிப்படை என்பதால், தீவிர சிறப்பு திருத்தப் பணி மும்முரமாக நடந்து வருகிறது. டிசம்பர் 16ல் வரைவு பட்டியல் வெளியாக உள்ளது. இச்சூழலில், அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் இன்று (டிச.11) சட்டசபை தேர்தல் குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம், புதுச்சேரி, கேரளா சட்டசபை தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம். டிசம்பர் 15ம் தேதி முதல் டிசம்பர் 23ம் தேதி வரை விருப்ப மனு விநியோகிக்கப்படும். தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும். டிசம்பர் 15ம் தேதி மட்டும் நண்பகல் 12 மணியில் இருந்து விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படும். படிவங்களில் கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் தெளிவாக பூர்த்தி செய்து, கட்சியின் தலைமையிடம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சட்டசபை தேர்தலுக்காக காங்கிரஸ், அமமுக கட்சிகள் ஏற்கனவே விருப்ப மனு விநியோகத்தை தொடங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.