மணல் கொள்ளையால் வறண்ட மாவட்டமானது கரூர்: இன்னும் 6 மாதத்தில் ஆட்சி மாறும், காட்சியும் மாறும்… கரூரில் விஜய் பேச்சு!
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இரண்டு மாவட்டம் எனத் தேர்வு செய்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே சிறப்புரையாற்றி வருகிறார். இன்று (சனிக்கிழமை) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டார். முதலில் நாமக்கல்லில் பிரச்சாரத்தை முடித்த அவர், அங்கிருந்து கரூர் புறப்பட்டு வந்தார். கரூரிலும் அவருக்கு வழி நெடுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், காவல் துறையினர் அனுமதித்த கரூர் வேலுச்சாமி புரத்திற்கு இரவு 7-15 மணிக்கு விஜய் வந்தடைந்தார். பின்னர் அவர் பொது மக்களிடையே பேசியதாவது:- காவல் துறையினருக்கு எனது மனமார்ந்த நன்றி. அவர்கள் இல்லை என்றால் நான் கரூர் பைபாஸ் இருந்து இந்த இடத்திற்கு வந்திருக்கவே முடியாது. அமராவதி ஆற்றங்கரையில் அமைந்த ஒரு ஊர் கரூர். இங்கு டெக்ஸ்டைல்ஸ் ரொம்ப பேமஸ். கரூரில் பேரிச்சை வளர்க்க சிறப்பு திட்டம் கொண்டு வரப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது, அது என்ன ஆனது? அதேபோல விமான நிலையம் கொண்டுவரப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார்கள். ஆட்சி முடியப்போகிறது. இன்னும் அதுவும் நிறைவேற்றப்படவில்லை. இப்போதுதான் சம்பந்தப்பட்ட மந்திரியை சந்தித்து மனு கொடுத்திருக்கிறார்கள். கரூர் மாவட்டத்தில் மணல் கொள்ளை போன்ற சட்டவிரோத செயல்களால் வறண்ட மாவட்டமாகிவிட்டது. இந்த மாவட்டத்தில் உள்ள பஞ்சப்பட்டி ஏரி சீரமைக்கப்படவில்லை. இந்த மாவட்டத்தில் ஒரு மந்திரி இருந்தார். ஆனால் இப்போது அவர் மந்திரி இல்லை. ஆனால் மந்திரி மாதிரி. அவர் அடிக்காத கொள்ளையே இல்லை. மது பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வைத்து கொள்ளை லாபம் சம்பாதித்தார். அவரது பெயரை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை உங்களுக்கு தெரியும். இதற்கெல்லாம் முடிவு கட்ட இன்னும் ஆறு மாதத்தில் ஆட்சி மாறும். காட்சியும் மாறும்.மக்களாட்சி அமையும்.மக்களுக்கு சுதந்திரமும், பாதுகாப்பும் இருக்கும். அதுவரை கான்ஃபிடன்ட்டா இருங்கள். வெற்றி நிச்சயம். இவ்வாறு விஜய் பேசினார்.விஜய் பேசிக் கொண்டிருக்கும் போது ஆம்புலன்ஸ்கள் அடுத்தடுத்து வந்தன. அந்த ஆம்புலன்ஸ்களுக்கு விஜய் வழி விட தொண்டர்களை கேட்டுக் கொண்டார். ஆனால் அடுத்தடுத்து ஆம்புலன்ஸ்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனால், வெறுப்படைந்த விஜய் இங்கு என்ன நடக்கிறது காவல்துறையினர் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்? யாருக்கும் பயப்பட வேண்டாம் உங்கள் கடமையை செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

Comments are closed.