கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (வயது34). பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரவீன், புதுக்கோட்டையில் ஒரு ஆட்டோவை திருடிக் கொண்டு அதே ஆட்டோவில் திருச்சி வந்துள்ளார். பின்னர் ஜங்ஷன் ரயில் நிலையப் பகுதியில் ஒரு பயணியின் செல்போனை பறிக்க முயன்றபோது போலீஸ் பிடியில் சிக்கிக்கொண்டார். இதுதொடர்பாக திருச்சி கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து பிரவீனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். பின்னர் பிரவீன், தனக்கு காது வலிப்பதாக கூறியதன்பேரில் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் இன்று( செப்.28 ) காலை சிற்றுண்டி வழங்குவதற்காக சிறை காவலர், பிரவீன் தங்கியிருந்த அறையின் கதவை திறந்து உள்ளார். அப்போது விசாரணை கைதி அந்த காவலரை தள்ளிவிட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறை காவலர் மற்றும் திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் நாலா புறமும் சென்று தேடினர். ஆனால் அவர் மாயமாகிவிட்டார். இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய விசாரணை கைதியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Comments are closed.