திருச்சியில் விஜய்க்கு கூடிய கூட்டத்தை வைத்து தேர்தல் களத்தை முடிவு செய்ய முடியாது- சொல்கிறார் திருமாவளவன்…!
வருகிற தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக தேர்தல் களம் காண்கிறது. இதற்காக இரண்டு மாநாடுகளை வெற்றிகரமாக முடித்துள்ள விஜய், திருச்சியில் இருந்து இன்று( செப்.13) தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த விஜய் மரக்கடை பகுதியில் தேர்தல் பிரசார வாகனத்தில் நின்றபடி தொண்டர்களிடையே உரையாற்றினார். விஜயை பார்ப்பதற்காக திருச்சி விமான நிலையம் முதல் மரக்கடை வரை தொண்டர்கள் குவிந்து இருந்தனர். அவரது பிரச்சார வாகனம் மரக்கடை பகுதியை வந்தடைய கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்துக்கு மேல் ஆனது. அந்த அளவுக்கு சாலையின் இருபுறமும் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறுகையில், தேர்தல் பிரச்சாரத்தை துவங்கியுள்ள விஜய்க்கு வாழ்த்துக்கள். கூட்டத்தை வைத்து தேர்தல் களத்தை முடிவு செய்ய முடியாது. ‘வேடன்’ என்கிற ஒரு தம்பிக்கு கூட பல லட்சம் பேர் திரளுகிறார்கள். மக்கள் திரள்வதை வைத்து ஒரு முடிவுக்கு வர முடியாது. கூட்டத்தை வைத்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களை காட்டிலும் அனைத்து நிலைகளிலும் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதிமுக கூட்டணி பிரிந்து கிடக்கிறது. திமுக கூட்டணி மட்டும்தான் வலுவாக உள்ளது. ஆகவே, வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தான் மீண்டும் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.