கடந்த சில நாட்களுக்கு முன்பு பேருந்துகளின் போட்டா போட்டி காரணமாக ஆர்.சி பள்ளி அருகே ஒருவர் பலியானார். அதன் பிறகும் பேருந்துகளுக்கு இடையே போட்டி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது என்பதற்கு இன்னும் ஒரு சம்பவம்…
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் இருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துக்கும் இடையே தகராறு வலுத்தது. விமான நிலைய பஸ் நிறுத்தத்தில் ஏற்பட்ட தகராறு மத்திய பேருந்து நிலையம் வரும் வரை நீடித்தது. இரண்டு பஸ்களும் நான் முந்தி நீ முந்தி என்று போட்டி போட்டு பஸ்களை இயக்கினர். அவர்கள் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தவுடன் இரு பேருந்து ஓட்டுநர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் அரசு பேருந்து மீது தனியார் பேருந்து வேண்டுமென்றே மோதுவது போல் வந்ததால் அரசு பேருந்து ஓட்டுநர் தனியார் பேருந்து நடத்துனரை சரமாரியாக தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தனியார் பேருந்து நடத்துனர் அரசு பேருந்து ஓட்டுனரை செருப்பால் அடித்ததால் இரு தரப்பினுடைய பயங்கர மோதல் ஏற்பட்டது. இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் தனியார் பேருந்து நடத்துனர்கள் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். இச்சம்பவத்தால் மத்தியபேருந்து நிலையம் மிக பரபரப்பாக காணப்பட்டது. அதனை தொடர்ந்து காவல்துறையினருக்கு கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் ரோந்து வாகனத்தில் வந்த காவலர்கள் இரு தரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

