Rock Fort Times
Online News

வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வலுவான கூட்டணி அமையும்- * திருச்சியில் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி

திருச்சிக்கு வருகை புரிந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ண சாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேவேந்திர குல மக்களுக்கு ஏற்பட்டு வரும் பாதிப்புகளை தடுக்க வலியுறுத்தி, திருச்சியில் பேரணி நடந்த அனுமதி கேட்டோம். போலீசார் அனுமதி மறுத்த நிலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினோம். திருச்சியில் புதிய தமிழகம் கட்சியினருக்கு பேரணி நடத்த அனுமதி மறுத்த காவல் துறையினர், மற்றொரு அரசியல் அமைப்புக்கு பேரணி நடத்த மட்டும் அனுமதி கொடுத்துள்ளனர். பேரணி நடத்துவதற்கு அனுமதி கொடுப்பதில் காவல் துறையினரின் செயல்பாடு ஒருதலைபட்சமாக இருக்கிறது. இடஒதுக்கீட்டில் 18 விழுக்காடு பட்டியல் இன மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் உள் ஒதுக்கீடு என்ற அடிப்படையில், 3 விழுக்காடு இடஒதுக்கீடு அருந்ததியர் இன மக்களுக்கு வழங்கப்படுகிறது. எஞ்சியுள்ள 15 விழுக்காட்டிலும் அவர்கள் அரசு பணியை பெறுகின்றனர். பட்டியல் இனத்தில் 76 சாதிகளை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். இதில் அருந்ததியர் இன மக்கள் மட்டுமே இட ஒதுக்கீட்டின் பயனை அடைகிறார்கள். உள் ஒதுக்கீடு என்ற வார்த்தையை அகற்றிவிட்டு, பட்டியல் இனத்தில் உள்ள அனைத்து சாதியினருக்கும் இட ஒதுக்கீட்டை பிரித்து வழங்க வேண்டும். நாங்கள் அருந்ததியர் இன மக்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கக் கூடாது என்று சொல்லவில்லை. அரசு பணியில் எத்தனை இடங்களில் அவர்கள் நிரப்பப்பட்டுள்ளனர் என்பதையும், அவர்களுடைய பொருளாதார நிலை என்ன என்பதையும், பொதுப்படையாக தமிழக அரசு அறிக்கையாக வெளியிட வேண்டும். அதனை செய்யாமல் மூன்று விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்குவது சரியானது அல்ல. உள் ஒதுக்கீடு விவகாரத்தில் ஒரு மாத காலத்திற்குள் தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வருகிற ஜூன் 18ம் தேதிக்கு பிறகு தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்துவோம். டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் ஆளுங்கட்சியா?, ஆண்ட கட்சியா? அதில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக அரசு தோற்கடிக்கப்பட வேண்டும். அதற்கு வலுவான கூட்டணி அமைய முயற்சி எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாநகர் மாவட்ட செயலாளர் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்