திருச்சி, புத்தூர் பகுதியில் நிறுவப்பட்டுள்ள சிவாஜி கணேசன் சிலையை திறந்து வைத்து மரியாதை செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைவுக்குப் பிறகு திருச்சி, பாலக்கரை ரவுண்டானா பகுதியில் அவருக்கு முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டது. ஆனால், பல்வேறு சிக்கல்கள் காரணமாக அந்த சிலையை கடந்த 14 ஆண்டுகளாக திறக்க முடியவில்லை. நீண்டகாலமாக மூடப்பட்டு கிடக்கும் அந்த சிலையை திறக்க அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் பெரும் முயற்சி எடுத்தனர். இதன் காரணமாக பாலக்கரை ரவுண்டானா பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிவாஜி சிலை அகற்றப்பட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சோனா, மீனா தியேட்டர் எதிரே நிறுவ முடிவு செய்யப்பட்டது. அங்கும் சிக்கல் ஏற்பட்டதால் திருச்சி புத்தூர் பகுதியில் நிறுவ முடிவு செய்யப்பட்டு திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, புத்தூர் பகுதியில் சிவாஜி சிலை நிறுவப்பட்டது. இந்த சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ( மே 8) திறந்து வைத்தார். பின்னர் சிலையின் கீழ் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிவாஜிகணேசன் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநகராட்சி மேயர் அன்பழகன், சிவா எம்பி, அருண்நேரு எம்.பி. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, நடிகர்கள் ராம்குமார்,பிரபு, விக்ரம் பிரபு மற்றும் பலர் பங்கேற்றனர்.
Comments are closed.