விழுப்புரத்தில் கடந்த 6 ம் தேதி பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி பங்கேற்றார். அப்போது அவர் விலைமாதுவுடன் சைவம், வைணவம் சமயங்களை தொடர்புபடுத்தி மிகவும் ஆபாசமாக கொச்சைப்படுத்தி பேசினார். அவரது இந்த சர்ச்சைக்குரிய பேச்சு சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதோடு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் திமுக எம்.பி. கனிமொழியும் கண்டனம் தெரிவித்தார். இந்தநிலையில் பெண்கள் குறித்து ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவி பறிக்கப்பட்டது. அவர் வகித்து வந்த திமுக துணை பொதுச் செயலாளர் பதவி திருச்சி சிவா எம்பி இடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தநிலையில் வனத்துறை அமைச்சரான பொன்முடி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஒரு உள் அரங்கக் கூட்டத்தில், தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இந்தத் தகாத கருத்தை நான் பேசியது குறித்து உடனடியாக மனப்பூர்வமாக வருந்தினேன். நீண்ட காலம் பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். பலருடைய மனதைப் புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்து விட்டது குறித்தும், அவர்கள் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்தும் நான் மிகவும் மனம் வருந்துகிறேன். மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.