கவர்னர் விவகாரத்தில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை தமிழகம் பெற்றுள்ளது- * சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
தமிழ்நாடு சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்ட பல முக்கிய மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அனுமதி அளிக்காமல் நிறுத்தி வைத்திருந்தார். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணைகள் முடிக்கப்பட்டு இன்று (08-04-2025) தீர்ப்பளிக்கப்பட்டது. தமிழக அரசின் 10 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருப்பது சட்டப்படி தவறு. அவருடைய செயல் ஏற்புடையது அல்ல. மசோதாவை ஜனாதிபதிக்கு, கவர்னர் அனுப்பியது தவறு. நிறுத்தி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கு ஒரு மாதத்தில் தீர்வு காண வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இந்தத் தீர்ப்பு குறித்து தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், அவைக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன். சற்று முன்பு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை நமது தமிழக அரசு பெற்றுள்ளது. இந்த சட்டமன்ற பேரவையில் நாம் நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்த பல முக்கிய சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பினார். பின்னர் அந்த மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி வைத்தோம். 2வது முறையாக சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும். ஆனால், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் காலம் தாழ்த்தி வந்தார். இதற்கு தனக்கு அதிகாரம் இருப்பதாகவும் தெரிவித்து வந்தார். இதனை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கவர்னர் மசோதாவை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என்றும், அந்த சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்ததாக கருதப்படும் என வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பு தமிழகத்திற்கு மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி. தி.மு.க.,வின் உயிர் கொள்கையான மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற தத்துவத்தை நிலைநாட்ட தமிழகம் போராடியது. தமிழகம் போராடும், தமிழகம் வெல்லும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
Comments are closed.