தமிழக அரசின் 10 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருப்பது சட்டப்படி தவறு- * சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு…!
சென்னை, பாரதியார் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பதவி காலம் நிறைவடைந்ததை அடுத்து, புதிய துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவை 2023ல் தமிழக அரசு அமைத்திருந்தது. அந்த குழுவில் பல்கலை மானிய குழுவின் உறுப்பினரையும் சேர்க்க வேண்டும் என தமிழக அரசுக்கு, கவர்னர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தி இருந்தார். அப்போது இருந்தே கவர்னர் மற்றும் தமிழக அரசு இடையே முரண்பாடு இருந்து வருகிறது. தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்து வருகிறார் என கவர்னருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்தது. உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பர்திவாலா, மகாதேவன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. இந்த வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று(08-04-2025) தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
* அரசியல் அமைப்பு சட்டம் 200ன்படி கவர்னர் முடிவு எடுக்க வேண்டும்.
* தமிழக அரசின் 10 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருப்பது சட்டப்படி தவறானது.
* சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீதான கவர்னர் செயல் ஏற்புடையது அல்ல.
* மசோதாவை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பியது தவறு. பஞ்சாப் கவர்னர் வழக்கில், உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவான தீர்ப்பை வழங்கி உள்ளது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு காலக்கெடு நிர்ணயம் செய்ய வேண்டுமா என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும்.
* மசோதாவை பொறுத்தவரை கவர்னருக்கு 3 வாய்ப்புள்ளது.
* மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதே பல்வேறு தீர்ப்புகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
* கவர்னருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை.
* தான் நிறுத்தி வைத்திருக்கும் மசோதா செல்லாது என கூற, கவர்னருக்கு உரிமை இல்லை.
* மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்த முடியாது.
* அமைச்சரவை ஆலோசனை படியே கவர்னர் செயல்பட வேண்டும். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து கவர்னர் ஒரு மாதத்தில் முடிவு எடுக்க வேண்டும்.
* ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைக்கப்படும் மசோதா 3 மாதங்களுக்குள் திருப்பி அனுப்பி வைக்க வேண்டும்.
* சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்து இருக்க வேண்டும்.
* கவர்னர் தன்னிச்சையாக செயல்பட முடியாது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து கவர்னர் உரிய நேரத்தில் முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.
Comments are closed.