இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை அமைச்சக கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. சுங்கச்சாவடிகளையும் நெடுஞ்சாலைகள் ஆணையங்கள் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் கட்டணம் வசூலிக்க அனுமதி அளித்து வருகிறது. இந்தியா முழுவதும் 4 வழிச்சாலை, 6 வழிச்சாலை, 8 வழிச்சாலை என புதிய சாலைகள் போடப்பட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள 1 லட்சத்து 46 ஆயிரத்து 145 கிலோ மீட்டர் தூர தேசிய நெடுஞ்சாலைகளில் 1,228 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகளிடமிருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 5 ஆயிரத்து 381 கிலோ மீட்டர் தூரம் நெடுஞ்சாலைகள் இருக்கின்றன. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 78 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் புதிதாக மேலும் 12 சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் தற்போது 78 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதம் வரை உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் மார்ச் 31 (இன்று) நள்ளிரவு 12 மணி முதல் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 15 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில் முதற்கட்டமாக 40 சுங்கச்சாவடிகளுக்கு வரும் ஏப்ரல் 1 -ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டண உயர்வு வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கட்டண உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விலையும் கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 15 ஆண்டுகளை கடந்த காலாவதியான சுங்கச்சாவடிகள் மூடப்பட வேண்டும் என்பது மத்திய அரசின் விதியாகும். அந்த வகையில் திருச்சி கல்லக்குடி சுங்கச்சாவடியில் விலை உயர்வு குறித்த விவரங்கள் வெளிவந்துள்ளன. :-
அதன்படி,கார் மற்றும் வேன் போன்ற நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.75 லிருந்து இன்று நள்ளிரவு முதல் 80 ரூபாயாக உயர்கிறது.இலகுரக வாகனங்கள் ரூ.125 லிருந்து ரூ. 130 ஆக உயர்கிறது.பேருந்து மற்றும் லாரிகளுக்கு 260 ரூபாயாக இருந்தது, தற்போது ரூ. 270 ஆக உயர்கிறது. வணிக வாகனங்களுக்கு 285 ரூபாயாக இருந்தது, புதிய கட்டணத்தின் படி ரூ.295 ஆக உயர்கிறது .புதிய கட்டண உயர்வின் படி ரூ. 5 முதல் 15 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.இந்த விலை மாற்றம் இன்று நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வருகிறது என தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.