Rock Fort Times
Online News

திருப்பூரில் வடிவமைத்த ஆடையுடன் பந்திப்பூரில் பிரதமர்மோடி….

தமிழக ஆடைகளுக்கு சேரும் பெருமை!

பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் தமிழக ஆடைகளை விரும்பி அணிந்து வருகிறார். உதாரணமாக சொல்லப் போனால் கடந்த 2019 ஆம் ஆண்டு சீன பிரதமர் தமிழகத்திற்கு வந்து மாமல்லபுரத்தை சுற்றி பார்த்த போது மோடி வேஷ்டி சட்டையுடன் உலா வந்தது அனைவருக்கும் நினைவு இருக்கலாம். இது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை !அதே போன்று தற்போது தமிழகத்திற்கு வந்த பிரதமர் மோடி திருப்பூர் ஆடைகளை விரும்பி அணிந்து வந்தார். முதுமலை காடுகளை சுற்றிப்பார்த்தபோது பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த கேமோஃபிளாஜ் டீ-சர்ட் உடை திருப்பூரில் தயாரிக்கப்பட்டது. முதுமலையில் பிரதமர் மோடி அணிந்திருந்த கேமோ ஃபிளாஜ் டீ-சர்ட் (உருமறை ஆடை), திருப்பூரில் தயாரானது என்பதை தொழில்துறையினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். பிரதமர் அணிந்திருந்த கேமோஃபிளாஜ் டீ-சர்ட் திருப்பூர் சென்னை சில்க்ஸ் குழுமத்தின் எஸ்.சி.எம். நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது. ராணுவ வீரரைப் போன்ற பிரதமரின் புகைப்படங்கள், நாடு முழுவதும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக எஸ்.சி.எம். நிறுவன நிர்வாக இயக்குநர் பரமசிவம் கூறியதாவது: கடந்த 15 ஆண்டுகளாக கேமோ டீ சர்ட் மற்றும் பேன்ட் உள்ளிட்ட ஆடைகளை உற்பத்தி செய்து வருகிறோம். 25 நாடுகளுக்கு மேல் ஆடைகளை ஏற்றுமதி செய்து வருகிறோம். இந்த ஆடைகள் நாடு முழுவதும் டெகத்லான் ஷோரூம்களில் விற்பனை செய்யப்படுகிறது. காடுகளில் வேட்டைக்கு செல்பவர்கள், சுற்றிப்பார்க்க செல்பவர்கள், டிரக்கிங் செல்பவர்கள் இதுபோன்ற ஆடைகளை வாங்கிச் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு இந்த ஆடைகள் அதிக அளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 100 சதவீதம் பருத்தியால் இந்த ஆடைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியின் முதுமலை பயணத்துக்காக பிரதமர் அலுவலக அதிகாரிகள் குழு, பெங்களூருவில் உள்ள டெகத்லான் ஷோரூமில் ஆடைகளை வாங்கியுள்ளனர். திருப்பூரில் தயாரான கேமோஃபிளாஜ் ஆடையை பிரதமர் அணிந்து வனத்துக்குள் சென்றபோது கம்பீரமாக காட்சியளித்தார். அவரது டீ-சர்ட் பலரையும் கவர்ந்துள்ளது. பின்னலாடை நகருக்கு பெருமை சேர்க்கும் விஷயமாக அவரது ஆடை மாறி உள்ளது எனக் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்