Rock Fort Times
Online News

ஆயிரக்கணக்கான ஆடுகளின் ரத்தத்தை மருளாளி உறிஞ்சி குடிக்கும் புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் திருவிழா இன்று விமரிசையாக தொடங்குகிறது…!

திருச்சி, புத்தூர் அக்ரஹாரம் பகுதியில் குழுமாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் நடைபெறும் திருவிழா மற்றும் குட்டி குடித்தல் நிகழ்ச்சி உலக பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவில் திருச்சி மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் வேலை நிமித்தமாக தங்கி உள்ளவர்கள், வெளி மாநிலங்களில் தங்கி உள்ளவர்கள் வருகை தந்து கலந்து கொள்வார்கள்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக ஆயிரக்கணக்கான ஆடுகளின் ரத்தத்தை கோவில் மருளாளி உறிஞ்சி குடிப்பது மெய்சிலிர்க்க வைக்கும். இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (04-03-2025) இரவு தொடங்குகிறது. திருச்சி வண்ணாரப்பேட்டை ஆறுகண் பகுதியில் அமைந்துள்ள மற்றொரு குழுமாயி அம்மன் கோவிலில் இருந்து அம்மனை ஓலை சப்பரத்தில் அலங்கரித்து புத்தூர் அக்ரஹாரம் கோவிலுக்கு மேளதாளம் முழங்க எடுத்து வரப்படுகிறது. அங்கு வழக்கமான பூஜைகள் நடைபெறுகின்றன. அதனைத் தொடர்ந்து நாளை 5-ம் தேதி (புதன்கிழமை) சுத்த பூஜையும், 6-ம் தேதி (வியாழக்கிழமை) முக்கிய நிகழ்வான குட்டி குடித்தல் நிகழ்ச்சியும் நடக்கின்றன. 7-ம் தேதி வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராட்டு விழாவும், 8-ம் தேதி சனிக்கிழமை அம்மன் குடிபுகுதல் நிகழ்வுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவை ஒட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருவிழாவை ஒட்டி ஆங்காங்கே அன்னதானம், நீர்மோர், பழங்கள் ஆகியவை வழங்க தனியார் அமைப்புகள் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இன்னிசை கச்சேரி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்