Rock Fort Times
Online News

திருச்சி காந்தி மார்க்கெட்டுக்குள் புகுந்த ரவுடி கூட்டம்!வியாபாரிகளின் பொருட்களை சூறையாடி கொலை வெறி தாக்குதல்…!( வீடியோ இணைப்பு )

திருச்சி காந்தி மார்க்கெட்டில் வியாபாரம் செய்து கொண்டிருந்த வியாபாரிகள் மீது அருகே உள்ள உப்புப் பாறை பகுதியை சேர்ந்த சுமார் 40க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்றிரவு ( பிப்.05 ) திடீரென காந்தி மார்க்கெட் வளாகத்திற்குள் நுழைந்து வியாபாரம் செய்து கொண்டிருந்த வியாபாரிகளின் பொருட்களை தூக்கி எறிந்தும், அவர்களை கண்மூடித்தனமாக தாக்கியும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அப்பகுதி வியாபாரிகள் கூறியதாவது., திருச்சியின் மிக முக்கிய பகுதியான காந்தி மார்க்கெட் பகுதியில் கஞ்சா புழக்கம் அதிகமாக இருப்பதும், 24 மணி நேரமும் தங்கு தடை இன்றி மதுபானங்கள் கிடைப்பதாலும் இப்பகுதியில் ரவுடிகள் மற்றும் கேடி கும்பலின் அராஜகம் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது. அதற்கான உதாரணம் தான் நேற்று எங்கள் மீது நடந்த கொலை வெறி தாக்குதல்.திருச்சி காந்தி மார்க்கெட் எதிரே உள்ள உப்புப்பாறை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மார்க்கெட் – பால் பண்ணை சாலையை கடந்து காந்தி மார்க்கெட்டுக்குள் வர முயன்றுள்ளனர். அப்போது லோடு ஏற்றி வந்த வேன் டிரைவருக்கும், அந்த இளைஞர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.வந்த இளைஞர்கள் அனைவரும் போதையில் இருந்ததால் வாகன ஓட்டுனர் அவர்களை எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் அருகில் இருந்த தங்களது நண்பர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோரை உடன் அழைத்துக் கொண்டு வேன் டிரைவரையும், லோடு ஏற்றிக் கொண்டிருந்த லோடுமேன்களையும் தொடர்ச்சியாக தாக்கத் தொடங்கினர்.

இருந்தும் ஆத்திரம் தாளாத அந்த இளைஞர்கள் மீண்டும் காந்தி மார்க்கெட் வளாகத்திற்குள் நுழைந்து அப்பகுதியில் காய்கறிகள் விற்பனை செய்து கொண்டிருந்த வியாபாரிகள் மீது தொடர்ச்சியாக கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதனால் எங்களின் பொருட்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது.இதுகுறித்து நாங்கள் திருச்சி மாநகர காவல் துறையின் அவசர கட்டுப்பாட்டு அறைக்கும், காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தோம். சம்பவ இடத்திற்கு வந்த காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் மாநகர காவல் இணை ஆணையர் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக எங்களிடம் விசாரித்தனர். அப்போது காந்தி மார்க்கெட் பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களை முடிவுக்கு கொண்டு வர மார்க்கெட் பகுதியில் நிரந்தரமாக இரண்டு போலீஸ் பீட்களை அமைத்துக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். உயர் அதிகாரிகளிடம் பேசி அதற்கு ஆவண செய்வதாக போலீசார் உறுதியளித்துள்ளனர். மேலும் இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்களை கைது செய்வதாகவும் வாக்குறுதி அளித்தனர் என்றனர். காந்தி மார்க்கெட் பகுதியில் வியாபாரிகள் மீது இளைஞர்கள் நடத்திய தாக்குதலால், அங்கு சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக வியாபாரம் பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்