Rock Fort Times
Online News

அதவத்தூர், குமாரவயலூர் கிராமங்களை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்காதீங்க ப்ளீஸ்… அமைச்சர் கே.என்.நேருவிடம் 100க்கும் மேற்பட்டோர் முறையீடு…!

திருச்சி மாநகராட்சியை பொருத்தவரை தற்போது 65 வார்டுகள் உள்ளன. திருச்சி மாவட்டத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அதனை 100 வார்டுகளாக உயர்த்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக, அருகில் உள்ள கிராமப் புறங்களை மாநகராட்சியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தாயனூர், அதவத்தூர், குமார வயலூர் உள்ளிட்ட கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின்போது இந்த கிராம மக்கள் கலெக்டர் அலுவலக சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சூழலில் குமார வயலூர், அதவத்தூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கொத்தட்டை, குறிஞ்சி நகர், பாரதி நகர் உள்ளிட்ட நான்கிற்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திருச்சி தில்லை நகரில் உள்ள நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேருவின் அலுவலகம் முன்பு திரண்டு தங்கள் கிராமப்புறங்களை மாநகராட்சியுடன் இணைக்காதீங்க… ப்ளீஸ் என்று முறையிட்டதோடு அதற்கான மனுவையும் கொடுத்தனர். அமைச்சர் கே.என்.நேரு அவர்களிடம் மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதனைத்தொடர்ந்து அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், குமார வயலூர், கொத்தட்டை கிராமங்களில் 70% மக்கள் விவசாயத்தை நம்பியுள்ளனர். விவசாயக் கூலி தொழிலாளர்கள் அதிகம் பேர் உள்ளனர். கிராமங்கள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே எங்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சியுடன் இணைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றனர். இதுகுறித்து அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கலாம். பொதுமக்களின் கருத்து கேட்டறியப்படும். அவர்கள் தங்கள் கருத்துக்களை கூற 165 நாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கொத்தட்டை கிராம மக்கள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை பரிசீலித்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்ப்பு தெரிவிக்கும் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளிக்கலாம் என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்