Rock Fort Times
Online News

யானை தந்தங்களை விற்பனை செய்ததாக திருச்சி ஆயுதப்படை எஸ்ஐ அதிரடி கைது…!

திருச்சியிலிருந்து ஒரு கும்பல், யானை தந்தத்தால் செய்யப்பட்ட கலைநயமிக்க 4 யானை பொம்மைகளை விற்பனை செய்ய உள்ளதாக சென்னை வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன் தலைமையில் கடந்த நவம்பர் மாதம் 14ஆம் தேதி அங்கு புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் விடுதியில் சோதனை செய்தனர். அப்போது ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஈஸ்வரி, கருப்பசாமி, முகமது ஜியாதீன், ஜஸ்டின், கார்த்திகேயன் ஆகியோர் விற்பனைக்காக யானைத் தந்தத்தால் ஆன பொம்மைகளை கொண்டு வந்தது தெரியவந்தது. மொத்தம் ஆறரை கிலோ யானை தந்தத்தினால் செய்யப்பட்ட 4 யானை பொம்மைகளை பாலமுருகன், பிரபாகரன், சுப்பிரமணி, பைசர், பார்த்தசாரதி, ராஜா, ராஜகுமார் ஆகியோர் வாங்க வந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து யானை தந்தத்தால் ஆன பொம்மைகளை விற்பனை செய்ய வந்தவர்கள், வாங்க வந்தவர்கள் என 12 பேரை வனத்துறை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ.ஆறரை கோடி மதிப்பிலான யானை தந்தத்தினால் ஆன பொம்மைகளை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், விழுப்புரத்தில் யானை தந்தங்களை விற்பனை செய்தது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆயுதப்படை எஸ்ஐ மணிவண்ணனுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அதன்பேரில் அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு கடந்த மாதம் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்தநிலையில் விழுப்புரம் வனசரக அதிகாரிகள் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் சட்டவிரோதமாக யானை தந்தங்களை விற்பனை செய்தது தெரியவந்தது. அதனை அடுத்து அவரை விழுப்புரம் வனசரக போலீசார் கைது செய்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்