கியூஆர் கோடு நடைமுறையால் கடும் பிரச்சனை : திருச்சியில் சில டாஸ்மாக் கடைகள், பார்கள் மூடல்- மது பிரியர்கள் அதிர்ச்சி…!
தமிழகத்தில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடைகளில் போலி மது வகைகள் மற்றும் விற்பனையில் முறைகேடுகளை தடுக்க க்யூஆர் கோடு பில்லிங் முறை கொண்டு வரப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன் படி, திருச்சி மாவட்டத்தில் உள்ள 159 அரசு டாஸ்மாக் கடைகளிலும் க்யூஆர் கோடு முறையிலான மது விற்பனை டிசம்பர் 5 -ந்தேதி முதல் நடந்து வருகிறது. இந்த புதிய பில்லிங் நடைமுறைக்காக, ஏற்கனவே கடைகளில் இருந்த அனைத்து மதுவகைகளும் விற்று தீர்க்கப்பட்ட நிலையில், புதிதாக க்யூ ஆர் கோடு கொண்ட மதுபாட்டில்கள் கடைகளுக்கு சப்ளை செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மதுபானக் கடைகளில் கடந்த சில தினங்களாக மதுபானங்கள் முழுமையாக கிடைக்காத நிலை இருந்து வருகிறது. இதனால் திருச்சியில் முக்கிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக்
கடைகள் காலி ரேக்குகளுடன் காணப்படுவதோடு சில கடைகளில் குறைந்த விலை கொண்ட மதுபானங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. அதுவும் தீர்ந்து விட்டதால் திருச்சி பஸ் நிலைய பகுதியில் சில கடைகள் நேற்றிரவு ஒன்பது மணிக்கே மூடப்பட்டன. திருச்சி மத்திய பஸ் நிலையம் தமிழ்நாடு ஓட்டல் அருகில் உள்ள ஒரு கடை இன்று 12 மணிக்கு திறக்கப்படாமல் மூடப்பட்டது. இதனால் சரக்கு வாங்க வந்த மது பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதேபோல் திருச்சி மாவட்டத்தில் சில கடைகள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடைகள் மூடப்பட்டுள்ளதால் அதனுடன் கூடிய பார்களும் மூடப்பட்டுள்ளன. ஆனால் பார்களில் அரசின் தடையை மீறி பிளாக்கில் சரக்குகள் விற்கப்படுவதாக மது பிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து டாஸ்மாக் விற்பனையாளர்கள் சிலரிடம் கேட்டபோது, சரக்குகள் குடோனில் இறக்கப்படும்போதும், ஏற்றப்படும் போதும் க்யூ ஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்யப்படுவது வழக்கம். அந்த ஸ்கேன் சரியாக செயல்படாமல் சுற்றுகிறது. இதனால், குடோனில் இருந்து கடைகளுக்கு சரக்குகள் வராமல் உள்ளது. இதன் காரணமாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில கடைகளில் சரக்குகளே இல்லை. இதனால் ஒரு சில கடைகள் மூடப்பட்டுள்ளது. இந்த இடர்பாடுகளை தவிர்க்க டாஸ்மாக் நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
Comments are closed.