திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று(21-11-2024) மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், டிசம்பர் மாதம் இறுதிக்குள் பணிகள் அனைத்தும் நிறைவடையும். ஜனவரி மாதம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பஞ்சப்பூர் பேருந்து நிலையம் திறக்கப்பட்டாலும் ஏற்கனவே உள்ள மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் தொடர்ந்து பயன்பாட்டில் தான் இருக்கும். ராமநாதபுரத்தில் ஒரேநாளில் 40 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. அதனால் அங்கு தண்ணீர் தேங்கியுள்ளது. அதனை சரி செய்ய அதிகாரிகள் சென்றுள்ளனர். இந்த மழையால் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பும். வருடம் முழுவதும் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் குடிநீர் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் மாநகராட்சி, நெடுஞ்சாலை துறை, மின்சார துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Comments are closed.