திருச்சியில், ஏற்கனவே மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் என இரு பேருந்து நிலையங்கள் உள்ளன. இங்கிருந்து நகரப் பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சோனா-மீனா தியேட்டர் எதிர்புறம் மற்றும் மன்னார்புரம் நாலு ரோடு ஆகிய இரண்டு இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி ஐபிஎஸ், போக்குவரத்து மேலாண்மை இயக்குனர் பொன்முடி, பொது மேலாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் கொடி அசைத்து பஸ் போக்குவரத்தை இன்று(28-10-2024) தொடங்கி வைத்தனர். இந்த தற்காலிக பேருந்து நிறுத்தங்களில்
மின்விளக்குகள், பயணிகள் நிழலகம், கழிப்பறைகள், குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. மன்னார்புரம் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், ராமேஸ்வரம் உள்ளிட்ட ஊர்களுக்கும், சோனா – மீனா தியேட்டர் எதிரே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, காரைக்கால் போன்ற ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மன்னார்புரம் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு பயணிகள் வந்து செல்ல வசதியாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையங்களில் இருந்து நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Comments are closed.