திருச்சி, திருவெறும்பூரில் கல்லூரி அருகே செயல்படும் டாஸ்மாக் மதுபான கடைகளை இடமாற்றம் செய்யக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாணவர் சங்கத்தினர் கைது…!
திருச்சி, திருவெறும்பூர் அருகேஉள்ள ஐடிஐ மற்றும் துவாக்குடி அரசு கலை கல்லூரி முன்பு உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுவின் தீமைகளை விளக்கி, மது குடித்த ஒருவர் இறந்தது போலவும், அவரை அடக்கம் செய்வது போலவும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் ,டாஸ்மாக் நிர்வாகம் செவி சாய்க்காத நிலையில் இன்று(07-10-2024) முதல் 48 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட இந்திய மாணவர் சங்கத்தினர் முயன்றனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததோடு சம்பவ இடத்திற்கு துவாக்குடி காவல் ஆய்வாளர் ஈஸ்வரன் மற்றும் திருச்சி டாஸ்மாக் மேலாளர் விஜய் சண்முகம் ஆகியோர் வந்து மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விதிமுறைப்படி 50 மீட்டர் தள்ளிதான் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இருந்தாலும் மாணவர்களின் நலன் கருதி மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவதாக கூறினர். அதற்கு மாணவர் தரப்பில் எவ்வளவு நாள் ஆகும் என கேட்டதற்கு, கால அவகாசம் எல்லாம் சொல்ல முடியாது என டாஸ்மாக் மேலாளர் விஜய் சண்முகம் கூறினார். இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் மாணவர்கள் துவாக்குடி அரசு கலை கல்லூரி வளாகத்திற்கு உள்ளே அமர்ந்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். அப்போது மாணவர்களை கல்லூரி வளாகத்திற்குள் வந்து போலீசார் எப்படி கைது செய்யலாம் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப் படுத்திய போலீசார், திருநெடுங்களம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
Comments are closed.