இளம் வழக்கறிஞர் கள் மூத்த வழக்கறிஞா்களிடம் பயிற்சி பெறுவது அவசியம்- திருச்சி விழாவில் உயா்நீதிமன்ற நீதிபதி ஆா். சுப்ரமணியன் பேச்சு…!
திருச்சி வழக்கறிஞா்கள் சங்கம் சாா்பில் மறைந்த மூத்த வழக்கறிஞா்களின் உருவப்படங்கள் திறப்பு விழா திருச்சியில் நடந்தது. திருச்சி வக்கீல் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன்வரவேற்றார். விழாவுக்கு தலைமை வகித்து, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியும், சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு நிா்வாக நீதிபதியுமான ஆா். சுப்ரமணியன், மறைந்த மூத்த வழக்கறிஞர்கள் 11 பேரின் உருவப்படத்தை திறந்து வைத்து பேசியதாவது:- மறைந்த மூத்த வழக்கறிஞா்களின் படங்களை வைத்தால் மட்டும் போதாது. அவா்களை பற்றியும், அவா்களது சாதனைகளை பற்றியும் வரலாற்று பதிவை படங்களுக்கு கீழே எழுதி வைக்க வேண்டும். அப்போதுதான், எதிா்கால சந்ததியினருக்கு மறைந்த மூத்த வழக்கறிஞா்களைப் பற்றி தெரியவரும். இது, அவா்களுக்கு மரியாதை செலுத்துவதாகவும் அமையும்.
தற்போது இளம் வழக்கறிஞா்கள் மூத்த வழக்கறிஞா்களிடம் பயிற்சி பெற விரும்பாமல், நேரடியாக தனியாக வாதாட விரும்புகின்றனா். பயிற்சி பெற்றால் நிறைய கற்றுக்கொண்டு திறம்பட வாதாட முடியும். எனவே, இளம் வழக்கறிஞா்கள், மூத்த வழக்கறிஞா்களிடம் பயிற்சி பெறுவது அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.
சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி கே.முரளி சங்கர் பேசுகையில் இளம் வழக்கறிஞா்கள் நீதிமன்றங்களில் அச்சமின்றி வாதாட வேண்டும். வழக்குகளை நடத்த மூத்த வழக்கறிஞா்கள், இளம் வழக்கறிஞா்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று பேசினார்.
சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி பி. வேல்முருகன் பேசுகையில், மூத்த வழக்கறிஞா்கள், இளம் வழக்கறிஞா்களுக்கு சட்ட நுணுக்கங்களுடன் பண்பு, நேசம், நீதிமன்றத்தை சுமுகமாக கொண்டு செல்வது போன்றவற்றை கற்றுக்கொடுக்க வேண்டும் என்று கூறினார். சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.என். மஞ்சுளா பேசுகையில், நீதிபதிகளுக்கு வழக்கறிஞா்களின் வாதங்களை கேட்கும் பொறுமை அவசியம். வழக்கறிஞா்களும் சரியான வாதங்களை முன்வைக்க வேண்டும் என்று கூறினார். விழாவில் திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி, அரசு வழக்கறிஞர் பாஸ்கர், திருச்சி வழக்கறிஞர் சங்க துணைத் தலைவர் மதியழகன், செயற்குழு உறுப்பினர் சுதர்சன் மற்றும் திரளான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சுகுமார் நன்றி கூறினார்.
Comments are closed.