திருச்சியில் உள்ள வீர முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை: எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் சாலை மறியல்…! (வீடியோ இணைப்பு)
கட்ட பஞ்சாயத்தில் ஈடுபட்டு நிலங்களை அபகரிப்பவர்கள் மீது “ஆபரேஷன் அகழி” என்கிற பெயரில் திருச்சி மாவட்ட போலீசார் மற்றும் மாநகர போலீசார் இணைந்து கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த ஆபரேஷன் மூலம் இதுவரை பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 14 பேர் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சோதனையின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த எடமலைப்பட்டி புதூர் சந்திர மௌலி, இந்திய ஜனநாயக கட்சியை சேர்ந்த பட்டறை சுரேஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து நில பத்திரங்கள், அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சோதனை தொடர்ந்து நடக்கும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இன்று(24-09-2024) தமிழர் தேசம் கட்சியின் நிறுவனரும், வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் தலைவருமான கே.கே.எஸ். செல்வகுமார் வீட்டில் சோதனை செய்ய 20க்கும் மேற்பட்ட போலீசார் சென்றனர். ராம்ஜி நகர் அருகே உள்ள கொத்தமங்கலம் பகுதியில் செல்வகுமார் வீடு உள்ளது. அங்கு போலீசார் சோதனை செய்ய சென்றபோது அவர்களை சோதனை செய்துவிடாமல் செல்வகுமாரின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி போலீசார் செல்வகுமார் வீட்டில் சோதனை செய்தனர். வேண்டுமென்றே செல்வகுமார் வீட்டில் சோதனை செய்வதாக கூறி அவரது ஆதரவாளர்கள் ராம்ஜி நகர் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். சாலை மறியல் காரணமாக திருச்சி- திண்டுக்கல் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.