திருச்சி புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் 181- வது ஆண்டு விழா கொண்டாட்டம்…!
சிறப்பு விருந்தினராக முன்னாள் மாணவர், பொறியியல் வல்லுநர் மோகன்ராஜ் பங்கேற்பு
திருச்சி புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் 181- வது ஆண்டு விழா 23ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை துலூஸ் அரங்கத்தில் நடைபெற்றது. புனித வளனார் கலைமனைகளின் அதிபர் எம்.பவுல்ராஜ் தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் அருட்தந்தை எம்.ஏ. இஞ்ஞாசி, தலைமை ஆசிரியர் அருட்தந்தை வி.ஜார்ஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் அருட்தந்தை அனைவரையும் வரவேற்று பேசியதோடு பள்ளியின் ஆண்டறிக்கையை காணொளி மூலமாக காட்சிப்படுத்தினார். விழாவில், சிறப்பு விருந்தினராக பள்ளியின் முன்னாள் மாணவரும், சி.கே.பிர்லா குழுமத்தின் அங்கமான, பிர்லா மென்பொருள் நிறுவனத்தின் ஐரோப்பிய நாடுகளின் வணிகத்திற்கான தலைமை பொறுப்பாளருமான பொறியியல் வல்லுநர் ஜே. மோகன்ராஜ் எம்.இ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர், தான் பள்ளியில் படித்த காலத்தில் பெற்ற அனுபவங்களையும், இன்றைய மாணவர்களின் எதிர்கால சவால்களை சந்திக்க வேண்டிய வழிமுறைகளையும் எடுத்துரைத்தார்.
விழாவில், கடந்த கல்வி ஆண்டில் பல்வேறு நிகழ்வுகளில் சாதனை புரிந்த மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஆண்டு விழாவினை முன்னிட்டு மாணவர்களின் பன்முக திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக நாடகமும், நடன நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றன. முடிவில் ஆசிரியர் அலுவலக சங்க செயலர் எஸ். அந்தோணிராஜ் நன்றி கூறினார். விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளியின் இயேசு சபை நிர்வாகத்தினரும், இருபால் ஆசிரியர்களும், அலுவலர்களும் செய்திருந்தனர்.
Comments are closed.