சட்டசபையில் நேற்றுஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நடந்த மானிய கோரிக்கையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 19 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். 45,000 கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி 145 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும். திறன் பயிற்சியானது கிராமப்புற இளைஞர்களின் திறனை மேம்படுத்தி வேலை வாய்ப்பு பெறுவதற்கான தகுதியை உருவாக்கி வேலை வாய்ப்புகளை உறுதி செய்கிறது. இந்த ஆண்டு 20,000 கிராமப்புற இளைஞர்களுக்கு 120 கோடி ரூபாய் செலவில் திறன் பயிற்சி வழங்கப்படும். மேலும், சுய தொழிலை ஊக்குவிக்கும் வகையில் 25,000 இளைஞர்களுக்கு திறன் பயிற்சி 25 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும். 5,000 சுய உதவிக் குழுக்களுக்கு 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும். சுய உதவிக் குழுக்கள் மற்றும் அதன் உறுப்பினர்களின் தொழில் நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக சமுதாய முதலீட்டு நிதியை பொருளாதார கடன் உதவியாக வழங்கப்படும். இந்த ஆண்டு 5,000 சுய உதவிக் குழுக்களுக்கு 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வீதம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் மூலமாக சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும். இதற்காக மொத்த தொகை 75 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.1,000 கிராம ஊராட்சிகளில் உள்ள மகளிர்புதிய தொழில் தொடங்குவதற்கும் ஏற்கனவே உள்ள தொழிலை மேம்படுத்துவதற்கும் நுண் தொழில் நிறுவனங்களுக்கான நிதி திட்டம் (Nano Enterprise Financing Fund) 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஊரக மகளிருக்கு தொழில் தொடங்குவதற்கு பல்வேறு உதவிகள் புரிந்து வருகிறது.இந்த ஆண்டு மகளிர் புதிதாக தொழில் தொடங்குவதற்கும், ஏற்கனவே செய்து வரும் தொழிலை விரிவுபடுத்துவதற்கும் 1,000 கிராம ஊராட்சிகளில், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் மூலம் “நுண் தொழில் நிறுவனங்களுக்கான நிதி திட்டம்” 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். இந்த ஆண்டு, மக்கள் நிலை ஆய்வு பட்டியலில் விடுபட்ட மகளிர் குடும்பங்களைக் கொண்டு 10,000 புதிய சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படும். புதிதாக உருவாக்கப்படும் குழுக்களுக்கு சுழல் நிதியாக 15,000 ரூபாய் வீதம் மொத்தம் 15 கோடி ரூபாய் வழங்கப்படும். ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து சுய உதவிக் குழுக்களுக்கும் 9 கோடியே 48 இலட்சம் ரூபாய் செலவில் புத்தாக்கப் பயிற்சி வழங்கப்படும். மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்களின் மறுவாழ்விற்காக பொருளாதார கூட்டமைப்புகள் 7 கோடியே 34 இலட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும். 100 முக்கிய சுற்றுலா தலங்களில் சுய உதவிக் குழுக்களின் பொருட்களை விற்பனை மற்றும் காட்சிப்படுத்த ‘மதி அங்காடிகள்’ 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். சிறப்பு சுய உதவிக் குழு உறுப்பினர்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய 100 ‘மதி எக்ஸ்பிரஸ்’ வாகனங்கள் 3 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும். மகளிர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் 100 சான்றளிக்கப்பட்ட சிறுதானிய விதை உற்பத்தி அலகுகள் 2 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். 37 மாவட்டத்திலும் ஒரு வட்டாரத்தில் ‘வானவில்’ பாலின வள மையம் உருவாக்கப்பட்டு ஊட்டச்சத்து, உடல் மற்றும் மன நலம், குழந்தை திருமணம், குடும்ப வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற பெண்கள் தொடர்பான சமூகப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி தீர்வு காண வழிவகை செய்யப்படும். இதற்காக இந்த ஆண்டு 1 கோடியே 36 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் “வானவில்மையம்” உருவாக்கப்படும் .முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட ஊரக பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட சுய உதவிக் குழு மகளிருக்கு சமையல் செய்முறை பயிற்சி 1 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.
