Rock Fort Times
Online News

ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் குவிந்த பக்தர்கள்…!

ஆடி மாத அமாவாசை நாள் என்பது முன்னோர்களை நினைத்து வழிபட உகந்த நாளாக கருதப்படுகிறது. ஆண்டின் அனைத்து மாதங்களிலும் அமாவாசை நாட்கள் வந்தாலும் தை அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை, ஆடி அமாவாசை போன்ற நாட்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.  குறிப்பாக, ஆடி மாதம் வரும் ஆடி அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது விசேஷமானதாக கருதப்படுகிறது.  குறிப்பாக ஆற்றின் கரையிலோ, கடற்கரையிலோ முன்னோர்களை நினைத்து சிறிது எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் செய்தாலே அவர்களது தாகமும், பசியும் அடங்கிவிடும் என்று புராணங்கள் கூறுகின்றன. அவ்வாறு வழிபாடு நடத்துவதால் முன்னோர்களின் அருளாசி கிடைப்பதுடன், நம் தலைமுறைகள் செழிக்கும் என்பதும் ஐதீகம்.
அந்தவகையில் இந்த ஆண்டு இன்று(04-08-2024) ஆடி  அமாவாசையாகும். அதாவது அமாவாசை திதியானது நேற்று மாலை 3.50 மணிக்கு தொடங்கி, இன்று மாலை 4.42 மணிக்கு முடிவடைகிறது. இதையொட்டி இன்று நீர்நிலைகள் மற்றும் பல்வேறு கோவில்களில் பக்தர்கள் ஏராளமானோர் குவிந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.  ஆடி அமாவாசையை முன்னிட்டு தென்னகத்து காசி என்று போற்றப்படும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள் கடலில் புனிதநீராடி மறைந்த தங்களுடைய முன் னோர்களுக்கு புரோகிதர்கள் மூலம் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.  தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள
22 தீர்த்தங்களில் நீராடி ராமநாத சுவாமி, பர்வத வர்த்தினி அம்பாளை வழிபட்டனர். ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்