சேலம் மாவட்டம், கொண்டலாம் பட்டியை சேர்ந்தவர் சண்முகம் (54). அதிமுக பகுதி செயலாளரான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அம்பாள் ஏரி ரோடு பகுதியில் ரியல் எஸ்டேட் அலுவலகம் உள்ளது. இவர் தனது அலுவலகத்தில் இருந்து பணியை முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தாதகாப்பட்டி இட்டேரி சாலையில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்து சண்முகத்தை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்த தகவலின்பேரில் போலீசாரும், உறவினர்கள் மற்றும் அதிமுகவினர் சம்பவ இடத்தில் குவிந்தனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. சண்முகத்தை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், கொலை செய்யப்பட்ட சண்முகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? , கொலைக்கான காரணம் என்ன?, முன்விரோதம் காரணமா அல்லது தொழில் போட்டியா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட சண்முகம், கடந்த 2011 முதல் 2016 வரை சேலம் மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டல குழு தலைவர் பதவி வகித்தார். மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.