Rock Fort Times
Online News

“இது எங்க ஏரியா இல்லை”- இளைஞர்கள் பொறி வைத்து பிடித்த கஞ்சா வியாபாரியை கைது செய்யாத காவல்துறை…. (வீடியோ இணைப்பு)..!

திருச்சி பிராட்டியூர் விநாயகர் கோயில் அருகே புளியமரத்தடியில் இரண்டு இளைஞர்கள் கஞ்சா புகைத்து கொண்டு இருந்தனர். அப்பகுதி இளைஞர்கள் அவர்களை பிடித்து விசாரித்ததில், அவர்கள் பெரம்பலூரை சேர்ந்த விக்னேஷ், வேல்முருகன் என்பதும், கஞ்சா வாங்குவதற்காக இங்கு காத்திருக்கிறோம் என்றனர். சிறிது நேரத்தில் ராம்ஜிநகரை சேர்ந்த பெண் கஞ்சா வியாபாரி அலார்ட் ஆறுமுகம் என்பவரிடம் கஞ்சாவை கொடுத்து அனுப்பினார். புங்கனூர் சாலையில் கஞ்சா வாங்குவதற்காக விக்னேஷ் காத்திருந்தார். அப்போது ஆறுமுகம் புல்லட்டில் கஞ்சாவை கொண்டு வந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த இளைஞர்கள் கஞ்சா வியாபாரி ஆறுமுகத்தை மடக்கி பிடிக்க முயன்றனர். இதை பார்த்த ஆறுமுகம் புல்லட்டை சாலையின் நடுவே போட்டு விட்டு கருவேல மரக்காட்டுக்குள் தப்பி ஓடினார். இளைஞர்கள் விரட்டி சென்று ஆறுமுகத்தை பிடித்தனர். இதுகுறித்து திருச்சி நீதிமன்ற அமர்வு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த எஸ்.ஐ.,க்கள் பாலன், குமார் இருவரும் கஞ்சா வாங்க வந்த விக்னேஷையும், வேல்முருகனையும் பிடித்து விசாரித்து கொண்டிருந்தனர். அப்போது
விரட்டி பிடித்த கஞ்சா வியாபாரி ஆறுமுகத்தை போலீசாரிடம் இளைஞர்கள் ஒப்படைத்தனர். அப்போது, எஸ்ஐ பாலன் புங்கனூர் எங்கள் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது இல்லை என்று ஆறுமுகத்தை பிடித்து செல்லாமல் நின்று கொண்டிருந்தார்.

இந்த செய்தி அறிந்து ஆறுமுகத்தின் உறவினர்கள் அங்கு வந்து எஸ்ஐ பாலன் கண்முன்னே பேசி தீர்த்துக்கலாம் என்று கூறி ஆறுமுகத்தை அழைத்து சென்றனர். அதனைத்தொடர்ந்து ஆறுமுகம் கொண்டு வந்த அரை கிலோ கஞ்சாவையும், அவர் பயன்படுத்திய புல்லட்டையும் போலீசார் பறிமுதல் செய்தனர். ஆனால், ஆறுமுகத்தை கைது செய்யவில்லை. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனையை கண்டு கொள்ளாததால் 57 பேர் உயிரிழப்பு ஏற்பட்டதற்கு ஆளுங்கட்சியினரும், காவல்துறையுமே காரணம் என பலரும் குற்றச்சாட்டிவரும் நிலையில், திருச்சியில் கஞ்சா விற்பனையை தடுக்காமல் பொதுமக்கள் பிடித்து ஒப்படைத்த கஞ்சா வியாபாரி மீது நடவடிக்கை எடுக்காத போலீசார் மீது காவல்துறை உயர் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்