தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் மூன்றாம் நாள் அலுவல் இன்று(22-06-2024) தொடங்கியது. சபாநாயகர் அப்பாவு கேள்வி-பதிலுக்கான நிகழ்ச்சி நிரல் தொடங்குவதாக அறிவித்தார். இந்த சமயத்தில் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதற்கு, நினைத்த நேரத்தில் நினைத்ததை பேசும் இடம் சட்டசபை அல்ல. வினா- விடை முடிந்ததும் பேசுவதற்கு அனுமதி தருகிறேன். முதல்வராக இருந்த உங்களுக்கு இது தெரியாதா? என எடப்பாடி பழனிசாமியை பார்த்து சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பினார். இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து சட்டசபையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். முன்னதாக, இன்றும் 2-வது நாளாக கருப்பு சட்டை அணிந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் சபைக்கு வருகை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும். கேள்வி நேரத்தை ஒத்தி வையுங்கள் என்று கோரினோம். ஆனால் அதை சபாநாயகர் ஏற்கவில்லை. அதனால் நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம். நேற்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை பார்த்துவிட்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் சிகிச்சையில் ஓமிபிரசோல் மருந்து பயன்படுத்துவதாகச் சொன்னார். நான் சொன்னது மெத்தனால் விஷ முறிவுக்கான ஃபோமிப்ரசோல். ஆனால், அமைச்சர் ஓமிபிரசோல் என்ற அல்சர் மருந்து பற்றி சொல்கிறார். அது மட்டுமல்ல கள்ளச் சாராய மரணங்கள் அதிகரிக்க பாதிக்கப்பட்டோர் சிகிச்சைக்கு தாமதமாக வந்ததே காரணம் என்று அமைச்சர் கூறியுள்ளார். இது பச்சைப் பொய். ஆனால், 3 பேர் இறந்தவுடன் மாவட்ட ஆட்சியர் ஒரு பேட்டி அளிக்கிறார். அதில் அவர் ஒருவர் வயிற்றுப் போக்கு, ஒருவர் வலிப்பு, ஒருவர் வயது மூப்பு காரணமாக இறந்ததாகக் கூறுகிறார். இதனை நம்பி லேசான உபாதைகள் இருந்தவர்கள் கூட மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்திக் கொள்ளாமல் உயிர்கள் பறிபோயுள்ளன. எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி 183 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 55 பேர் பலியாகியுள்ளனர். ஆட்சியர் உண்மையைச் சொல்லியிருந்தால் இத்தனை உயிர்கள் பறிபோயிருக்காது. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய விற்பனை வலையில் திமுக கவுன்சிலர்களுக்கு தொடர்பு இருக்கிறது. அதனால் அரசு அமைக்கும் விசாரணை ஆணையத்தால் உண்மை வெளிவராது. மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் நிச்சயமாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். நாங்கள் இவ்விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடியுள்ளோம். நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Comments are closed.