திருச்சி,ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேகம் இன்று ( ஜூன்- 21 ) நடைபெற்றது. பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களிலும் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில் ஜேஷ்டாபிஷேகம் முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம், கேட்டை நட்சத்திரத்தில் இவ்விழா நடத்தப்படுகிறது. அதன்படி நேற்று காலை 6 மணிக்கு கருடமண்டபத்தில் இருந்து திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர், தங்கம் மற்றும் வெள்ளி குடங்களுடன் புறப்பட்டு காவிரி ஆற்றுக்கு வந்தனர். அங்கு கோவில் வழக்கப்படி,கோவில் அதிகாரிகள், பணியாளர்கள், மிராசுதாரர்களுக்கு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் காவிரி ஆற்றில் 1தங்ககுடம், 28 வெள்ளிக்குடங்களில் புனித நீர் சேகரிக்கப்பட்டது. அங்கிருந்து 7 மணிக்கு தங்கக்குடத்தில் உள்ள புனிதநீர், கோவில் யானை ஆண்டாள் மீது வைத்தும், 28 வெள்ளிக்குடங்களை மேள, தாளங்கள் முழங்க புனிதநீர் அம்மாமண்டபம் ரோடு, ராஜகோபுரம் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துவரப்பட்டது. பின்னர் நம்பெருமாள் மற்றும் உபயநாச்சியாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.
இந்த ஆண்டிற்கான முதல் தைலகாப்பு மூலவர் பெரிய பெருமாள் மீது பூசப்பட்டது. உற்சவர் நம்பெருமாள் மற்றும் உபயநாச்சியார்களுக்கும் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. ஜேஷ்டாபிஷேகத்தின் மறுநாளான நாளை (22-ந் தேதி) காலை திருப்பாவாடை எனப்படும் தளிகை நிகழ்ச்சி நடைபெறும்.
ஜேஷ்டாபிஷேகம் மற்றும் திருப்பாவாடை விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரியப்பன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Comments are closed.